என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

திங்கள், 18 ஜூலை, 2011

என் பாடசாலை வாழ்க்கையில் பசுமை நினைவுகள்..

பாடசாலை வாழ்க்கையில் பசுமை நினைவுகள்:

நான் பள்ளியில் சேர்ந்த முறையை என் தந்தை இன்னும் சொல்லிச் சொல்லி பெருமைப் படுவார். எனக்கும் நியாபகம் இருக்கிறது. 

எனக்கு 3 வயது. என்னுடைய இரண்டு அக்காக்களும் பள்ளிக்குச் செல்லும் போது நானும் பள்ளிக்குச் செல்லவேண்டுமென்று அடம் பிடித்து அழுது அவர்கள் பின்னாலேயே ஒரு ஸ்லேட்டும் பலப்பமும் மஞ்சள் பையில் எடுத்துக்கொண்டு ஓடுவேன். எவ்வளவு தடுத்தாலும் என்னை நிறுத்தவே முடியாது. 

என் பெரியப்பா தான் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் என்பதால் என்னை வகுப்பறையில் சென்று உட்கார வைத்து விடுவார். நானும் அக்காக்களுடனே சேர்ந்து அ ஆ , 1, 2, (எண்ணும் எழுத்தும்) படிக்க ஆரம்பித்துவிட்டேன். சொல்லப்போனால் மற்ற குழன்தைகளை விட வேகமாக நான் தான் கற்றுக்கொள்வேன் என்று எல்லோரும் சொல்வார்கள். இப்படி அதீத ஆர்வம் படிப்பின் மேல் இருந்ததால்.... மூன்றரை வயதிலேயெ முதல் வகுப்பில் சேர்த்துவிட்டார்கள். 

என் தந்தை இன்னமும் பெருமைப்பட்டு எல்லோரிடமும் சொல்லும் ஒரு விஷயம்... லதா 2ஆம் வகுப்பு படிக்கும்போதே நியூஸ் பேப்பர் நல்லா வாசிப்பா… (நான் சந்தோஷப்படும்படி எத்தனையோ விருதுகள்(படிப்பிலும் விளையாட்டிலும்) வாங்கினாலும் இந்த வார்த்தைகளை இப்போதும் அப்பா சொல்லக் கேட்கும்போது ஏற்படும் சுகத்திற்கு ஈடாகாது))

படிப்பில் சுட்டியாக இருந்தேன். விளையாட்டில் படு சுட்டியாக இருந்தேன். அரட்டை அடிப்பதில் நான் தான் கிங்க் (குயின் இல்லை கிங்க்) எப்போதும் ஆண்பிள்ளைகளுடன் தான் விளையாடுவேன். அந்த ஆரம்பப் பள்ளியில் ஒரு பேரீச்சை மரம் இருக்கும். அதில் சீசன் நேரத்தில் பிஞ்சு விடும். துவர்ப்பாக இருக்கும் அந்தப் பிஞ்சு காய்களைப் பறித்து சாப்பிட காலையில் ஆசிரியர்கள் வருவதற்கு முன்பே ஓடி விடுவோம். அப்படியும் பியூன் எங்களைத் தடை செய்து விடுவார். மதியம் ஒரு ஆசிரியர் மட்டும் பள்ளியிலேயே சாப்பாடு கொண்டுவந்து சாப்பிட்டு உறங்குவார். அப்ப தான் எங்களுக்கு அந்தப் பேரீச்சை பறிக்க தோதான சமயம். 

சில நாள் என்னோடு சேர்ந்து உத்தமன், குமார் என்ற இரு பையங்களும் ஆசிரியர் குறட்டை விட ஆரம்பித்தவுடன் நைசாக அந்த அறையை வெளிப்பைக்கமாக பூட்டிவிட்டு ஓடிப்போய் பள்ளி வளாகத்தில் இருக்கும் பேரீச்சையை பறித்து சாப்பிடுவோம். திடீரென்று ஒரு நாள் ஆசிரியர் விழித்துக்கொண்டு அவரை அறையில் பூட்டியதை அறிந்து எங்கள் மூன்று பேரையும் பள்ளிவளாகத்திலிருந்த வேப்பமரத்தில் கட்டிவைத்தது ... இன்னும் என் தம்பி என் பிள்ளைகளிடம் சொல்லி சிரிப்பார்.

உயர்நிலைப் பள்ளியின் அரட்டை எழுத பக்கங்கள் நிறைய வேண்டும். இருன்தாலும் சில நிகழ்ச்சிகள் சொல்கிறேன்.

எங்கள் பள்ளியில் கி.இராமகிருட்டிணன் என்ற ஒரு தமிழாசான் இருந்தார். அவர் எனக்குக் கொடுத்த பட்டம் வாலு. அவருக்குத் தூய தமிழில் தான் பேச வேண்டும். தப்பித் தவறி ஒரு வார்த்தை ஆங்கிலத்தில் வந்துவிட்டால் நெற்றிக்கண்ணைத் திறந்துவிடுவார். சார் என்றும் சாக்பீஸ் என்றும் மாணவிகளின் வாயில் சரளமாக வந்துவிடும். அய்யா என்றுதான் கூப்பிட வேண்டும் .

பள்ளிக்குத் தாமதமாக வந்து அவரிடம் மாட்டிக்கொண்டு அழுத என் தோழிகள் இன்னும் நினைவிலிருக்கிறது.? காரணம்.. ஏன் தாமதமாக வந்தாய் என ஆசிரியர் கேட்க...பயத்தில் அவர்கள் உளர ஆரம்பித்துவிடுவார்கள். சார்... பெல் அடிச்ச உடனே காம்பௌன்ட் கேட் க்ளோஸ் பண்ணிட்டாங்க சார்... அவ்வளவுதான்...

கற்பனை பண்ணிப் பாருங்க...
பெல்... காம்பௌன்ட்,... கேட்... க்ளோஸ்... அவ்வளவுதான் அந்த பெண் அன்னைக்கு க்ளோஸ்....

கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க...அய்யா நான் வரும்போதே பள்ளியின் மணி அடித்து விட்டது. அதனால் மதிற்சுவர் கதவை தாழிட்டு விட்டார்கள். அதுதான் எனது தாமதத்திற்குக் காரணம் என்று ஒரு 7 ஆம் வகுப்பு மாணவியால் சொல்ல முடியுமா?

இப்படி இம்சை பண்ணும் அந்தத் தமிழாசிரியரை.... நான் கலாய்க்க ஆரம்பித்துவிடுவேன். திடேரென்று சந்தேகம் கேட்பென்... தலையிலிருந்து CLIP எடுத்து... அய்யா... இதை என்னவென்று சொல்வது தமிழில்? என்று கேட்பென்...

அடுத்த பெண்ணின் தலையிலிருந்து ரப்பர் பாண்ட் எடுத்து அய்யா இதற்ற்கு தமிழில் என்ன பெயர் என்று கேட்பென்... இப்படி நான் ஏடாகுடமாகக் கேள்விகள் கேட்டு தம்ழிகாசிரியரை பள்ளிக்கே அகராதி கொண்டுவர வைத்த பெருமையைப் பெற்றென்.... 

கிளிப் க்கு அவர் சொன்னது : கவ்வி, இரப்பர் க்கு... நெகிழ்பொருள்... சாக்பீஸ்க்கு : சுண்ணக்கட்டி.

யோசித்துப் பாருங்கள், என் தலையிலிருந்து நெகிழ்பொருள் அறுந்துவிட்டது என்று சொன்னால் எப்படி இருக்கும்? என் தலைமுடிக்கு ஒரு கவ்வி இடவேண்டும் என்றுதான் சொல்ல முடியுமா?

அடுத்து கஸ்தூரி என்ற ஆங்கில டீச்சர். இவரிடம் அடிவாங்காத ஒரே ஒரு மாணவி கூட இருக்க முடியாது. இவரும் இப்படித்தான் ஏடாகுடமாக கேள்விகள் கேட்டு பதில் சொல்லவில்லையென்றால் ஸ்கேல் கொண்டு அடிப்பார். 

பதில் தெரியவில்லையென்று எல்லோரும் அடி வாங்குவார்கள் . என் முறை வரும். நான் டக் என்று பதில் சொல்லி விடுவேன், பளீரென்று எனக்கு அடி விழும்..." எப்படிடீ எது கேட்டாலும் பதில் சொல்றெ?" னு கேட்டு பதில் சொன்னாலும் அடிப்பா....(என் அப்பாவிடம் டியூஷன் படிக்க பிள்ளைகள் வீட்டிற்கு வருவார்கள் நான் ஏழாவது படித்தாலும் எட்டு, ஒன்பது பத்தாவது பாடங்களில் அத்துப்படி. ஏனென்றால் அப்பா வீட்டில் பிள்ளைகளுக்கு நடத்துவதை பக்கத்திலிருந்து படித்துவிடுவேன். அதனால் என்பாட சம்மந்தமான கேள்விகள் எனக்கு வெகு சுலபம்)

ஆனால் என் பள்ளித் தலைமை ஆசிரியருக்கும் PT டீச்சருக்கும் நான் செல்லப்பிள்ளை. ஏன்னா... பள்ளி சார்பில் செல்லும் எல்லா விளையாட்டுப் போட்டிகளிலும் நான் ஜெயித்து விடுவேன். Zonal level, Distict level, state level nnu எங்க போனாலும் இந்த லதாராணி ஹீரோயின் ஆகிடுவா. அதுல எங்க ப்ரின்சிபால் ரொம்ப ரொம்ப பெருமை படுவாங்க. ஒரு முறை டிஸ்ட்ரிக்ட் லெவெல் அதெலெடிக் மீட்... அது வேலூர் கோட்டை மைதானத்தில் நடந்தது ... அதுல ஹெப்டத்லான் சாம்பியன் ஆனேன். மேடையிலே என்னை கட்டிபிடித்து என் ப்ரின்சிப்பால் ராஜேஸ்வரியம்மா எனக்கு முத்தம். கொடுத்தாங்க. என்னுடைய அம்மா எல்லாம் வந்திருந்தாங்க. ரொம்ப பெருமைப் பட்டாங்க. 
இப்படி கலாட்டக்களும் சந்தோஷங்களும் நிறைந்தது என் பள்ளி வாழ்க்கை.

ஒரு நெகிழ்ச்சியான சம்பவம். என்பள்ளியில் என்னுடைய வகுப்பிலேயே ஒரு தாழ்த்தப்பட்ட மாணவி(அப்பொல்லாம் அவங்க கிட்டே நட்போடு இருந்தா திட்டுவாங்க அது போல ஒருகால கட்டம்) ஸ்டெல்லான்னு பேரு. ரொம்ப ஏழை. ஆனா நல்லா படிப்பா... சாப்பாடு கொண்டு வரவே மாட்டா.. எங்க செட் ஒரு எட்டு பேர்..தினம் ஒன்றாகத்தான் மரத்தடியில் உட்கார்ந்து சாப்பிடுவோம். அவளையும் சேர்த்துக்கொண்டு. எல்ல்லோரும் நாங்கள் கொண்டு செல்லும் சாப்பாட்டில் கொஞ்சம் கொடுத்து எல்லோரும் பகிர்ந்து உண்போம். இது ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை ஒரு நாள் விடாமல் தொடர்ந்தது. ... நாங்கள் இதை எப்படி ஆரம்பித்தோம் என்று நினைவிலில்லை. இப்போது நினைத்தாலும் பெருமையாக இருக்கும். அறியாப் பருவத்திலேயே இப்படி ஒரு எண்ணம் இருந்தது நினைத்து))

அடுத்து கல்லூரி..
ஹப்பப்பா... கல்லூரியில் பண்ணின கலாட்டா.... அளவிட முடியாதது ...

கல்லூரிக்குப் போகும் நாட்களைவிட நான் விளையாட்டு கேம்ப் க்கு போன நாட்கள்தான் அதிகம். மாதத்தில் பாதி நாட்கள் ஏதாவது Tournament, கேம்ப் என்று சென்று விடுவேன். மீத நாட்களில் கல்லூரிக்கு வந்தால் முதல் Period முடிந்தவுடன் தியேட்டருக்குச் சென்றுவிடுவோம். 

என் அக்கௌன்ட்ஸ் மாம்.. பெயர் விமலா. ஒரு சாது... அவளுக்கு என்னைப் பார்த்தால் பயம். நான் இருந்தா சரியாவே பாடம் நடத்த மாட்டா. ஏதாவது கேள்வி கேட்பேன்.( பாதி நாட்கள் நான் கல்லூரியில் இல்லாததால் தனியாக நான் அக்கௌன்ட்ஸ் டியூஷன் படித்தேன். அதனால் ...இவள் நடத்துவதற்கு முன்பே படித்துவிட்டிருப்பேன். கேள்வி கேட்பது சுலபம் ) கேள்வி கேட்டா கிளாஸ் ரூம் விட்டு போய்டுவா... 

அதுக்கப்புறம் டேபிள் மேலே ஏறி பாட்டு டான் ஸ்னு ஆட.. பக்கத்து க்ளால் ல இருந்து Complaint ப்ரின்சிபால் க்கு போகும். அவங்களும் சொல்லுவாங்க... லதா தானே.. பரவால்ல விடுங்க... ஏன்னா சென்னை யுனிவர்சிடியில நீச்சலில் முதலாவதாக வந்து எங்க காலேஜ்க்காக தங்க மெடல் வாங்கின முதல் பெண் நான். அதனால இங்கயும் அதே செல்லம். ரன்னிங், லாங் ஜம்ப் ஹைஜம்ப் என்று எல்லாவற்றிலும் கண்ண்டிப்பாக பரசு தட்டிக்கொண்டுதான் வருவேன் எங்கு சென்றாலும் . அதே போல... இன்டெர் College Hokey ல வேலூர் அக்ஸீலியம் காலேஜ் க்கு எதிரா நாங்க ஒன்பது கோல் அவங்க ஸீரோ... அதுல தொடர்ந்து மூனு கோல் போட்டு ஹாட்ரிக் அடிச்சு அந்த மாட்ச்ல மட்டும் அம்மனி 5 கோல் போட்டேன்... சோ.. லதா என்ன பன்னாலும் எங்க ப்ரின்சிபால் கண்டுக்கவே மாட்டாங்க...

நான் கேம்ப் முடிச்சுட்டு காலேஜ் வந்தவுடனே ப்ரென்ட்ஸ் சொல்லுவாளுங்க..."நீ இல்லாம விமலாக்கு ரொம்ப குளிர் விட்டுப்போச்சுடீன்னு (அதாங்க எங்க அக்கௌன்ட்ஸ் மேடம்)

சில பொண்ணுங்க சொல்லுவாளுங்க... சீ பாவம்டீ விமலா... இத்தனை நாளா சந்தோஷமா இருந்தா.. "

காலேஜ் டே ஹாஸ்டல் டே வந்துட்டதுன்னாலும் அந்த ஸ்டேஜ் நம்மோடதுதான். (நான் வீட்டிலிருந்துதான் காலேஜுக்குச் செல்வேன். இருந்தாலும் வார இறுதிகளில் விடியற்காலை விளையாட்டுப் பயிற்சி இருக்கும் அதனால் வார இறுதிகளில் ஹாஸ்டலில் தங்கிவிட்டு பயிற்சி முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்வேன்) அதனால் விடுதியும் நம் வசம். 

பொதுவாக, விழாக்களுக்கு வரும் சீப் கெஸ்ட் எல்லோருடைய பேச்சும்முடிந்தபின் இரண்டு மூன்று டாண்ஸ் பார்த்துவிட்டு சென்றுவிடுவார்கள். அதற்குப்பின்னும் விழா தொடருமல்லவா? அப்போது யார் ஆடினாலும் அது எந்த பாடலானாலும் நான் ஏறி ஆடுவேன். 

ஒருமுறை குரூப் டாண்ஸ் ஆடுவதற்க்கு ஆரம்பித்தார்கள். அதில் இரண்டு பெண்களைத்தவிர மற்றவர்கள் நிகழ்ச்சிக்காக அப்பொதுதான் கற்றுக்கொண்டு ஆடுகிறார்கள். நடனம் ஆரம்பித்த சில நொடிகளில் நான் மேடையில் தோன்றி ஆட ஆரம்பிக்க... கல்லூரி மாணவிகள் எல்லாம் ஒரே கைத்தட்டல் ஆரவாரம்.... நான் கண்ணா பின்னாவென்று ஆடுகிறேன்... புதிய அன்த நான்கு பெண்கள் டாண்ஸ் ஸ்டெப் மறந்துவிட்டு திரு திரு வென்று முழித்துக்கொண்டு அப்படியே நிற்கிறார்கள்...அப்படி ஒரு கலாட்டா...

அதில் என்ன கொடுமைன்னா ... அந்த நடனம் முடிந்தப்புறம்... ONCE MORE லதா ONCE MORE லதான்னு ஒரே கூப்பாடு போட்டு ஆர்ப்பாட்டம் பண்ணுவாளுங்க என் தோழிகளெல்லாம்....

ஹாஸ்டல் டே லயும் அப்படித்தான் பிரின்சிபால் சென்றுவிட்ட பின் இதே போல் தான் மேடை எனக்குச் சொந்தமாகிவிடும். எங்க ப்ரொபசர்ஸ் லெக்சரர்ஸ் எல்லாம் சில நடனத்தை ONCE MORE கேக்க கேக்க களைத்து கீழே விழும் அளவுக்கு தொடர்ந்து ஆடிகிட்டே இருப்பேன்.

சினிமா தியேட்டருக்கு போவோமே அங்கயாவது சும்மா இருப்போமா? அதுவும் இல்லை. தியேட்டர்ல எப்பவுமே நாங்க டிக்கட் வாங்க கவுண்டர்ல போய் நின்னதா சரித்திரமே இல்லை. எங்க காங்க் (Gang) பார்த்தா... உடனே எத்தனை பேர்ன்னு எண்ணிகிட்டு அவனே எங்களுக்கு டிக்கெட் தியேட்டருக்குள்ள வந்து தந்துடுவான். 

ஏன்னா நாங்க அதுக்குமுன்னாடியே போய் உக்கார்ந்துடுவோம். தியேட்டர்ல அன்னைக்கு படம் பாக்க வந்தவங்க... எந்த சனியன் முகத்துல முழிச்சமோ தெரியலே... இன்னைக்குன்னு படம் பாக்க வந்திருக்கோமேன்னு அவங்களை அவங்களே திட்டிக்கற அளவுக்கு அப்படி ஒரு கலாட்டா பண்ணுவோம். எங்களை மீறி எங்களை சுத்தி உள்ளவங்க ஒரே ஒரு டயலாக் கூட கேட்டுடக் கூடாது... அப்படி பண்ணுவோம். அதுல ரொம்ப கவனமா செயல் படுவோம்.

இப்போ வந்த சண்டைக்கோழி பார்த்துட்டு ஒரு பிரண்ட் இந்தியால இருந்து போன் பண்ணி சொல்றான்... லதா நீ பண்ணின கலாட்டா மாதிரியே இந்தப் படத்துல மீரா ஜாஸ்மின் பண்றா...உன் நியாபகம் தான் அந்தப் படம் பார்க்கும்போதுன்னு சொன்னான். எங்க அம்மாவே எனக்கு போன் பண்ணி சொன்னாங்க...அந்த படம் பாரும்மா உன்ன மாதிரியே கலாட்டா பண்ணுது அந்த பொண்ணு -னு)

ஒரு முறை சின்னத்தம்பி பெரியத்தம்பி படம் பார்க்க இப்படித்தான் லதா& Co, (இது எங்க விமலா Miss வச்சது.. எங்க காங்கை(Gang) இப்படித்தான் கூப்பிடுவா)

ரொம்ப சீரியஸ் சீன்லல்லாம் கொல்லுன்னு சிரிப்போம். தியேட்டர்ல எக்ஸ்ட்ரா சீட் போட்டு உக்காந்து பார்க்கறாங்க அந்த அளவுக்கு ரஷ். நாங்க தொடர்ந்து சிரிக்க சிரிக்க ஒரு ஆளுக்கு பயங்கர கோவம் வந்து அந்த போல்டிங்(Folding CHAIR) சேரை அப்படியே தூக்கி எங்களை அடிக்க வந்துட்டான். "பொண்ணுங்களையா பெத்திருக்காங்க சரியான தருதலைங்களாஇப் பெத்து போட்டு நம்ம உயிரவாங்கறாங்கன்னு" அன்னைக்கு எங்க அப்பா அம்மாவையெல்லாம் திட்டினான் அவன். .

இன்னோரு தியேட்டருல... எங்க காலேஜுக்கு எதிர்ல ஒரு IIT இருக்கும். அங்க இருக்கற ஒரு பாய்ஸ் டீம்..எப்பவும் எங்களுக்குள்ள சண்டை வரும்...அவனுங்க எங்க பின் சீட்ல லைன்னா உக்கார்ந்து சிகெரெட் பிடிக்க ஆரம்பிக்க ...எனக்கு சுர்ர்ர்ர்ர்.... ரெண்டு மூனு முறை சொல்லி பார்த்தோம் நிறுத்த சொல்லி .. வேணுமின்னே பண்ணவும் நான் திடீர்னு எழுந்து... ரெண்டு பையன் வாயில இருந்த சிகரெட்டை வெடுக்குன்னு பிடுங்கி வீசி எறிஞ்சுட்டேன்... சண்டை ஆரம்பம்... பப்ளிக் எங்களுக்குத்தான் சப்போர்ட்...

படம் முடிஞ்சி வெளிய போறோம்... வாலாஜா பேட்டை ரௌடிங்களை கூட்டிகிட்டு பத்து பதினஞ்சு பேர் பைக் ஸ்கூட்டர்ன்னு நின்னுகிட்டிருக்கனுங்க... அப்புறம் ஒருவழியா தப்பிச்சோம் அது வேற கதை..

இப்படி கலாட்ட நிறைய நிறைய பண்ணி இருந்தாலும்....இங்கேயும் எங்களுக்கு மனம் திருப்தியான ஒரு விஷயம் செஞ்சிருக்கோம். 

எங்கள் கூட படித்த ஒரு ஏழைப் பெண் . திடீரென்று பார்வை மிக மிக மோசமாக பாதிக்கப்பட்டாள். நாங்க எல்லாரும் எப்பொல்லம் முடியுதோ அப்பொல்லாம் பணம் சேர்த்து வச்சு...தொடர்ந்து செக் அப் க்கு அழைத்துச் சென்று அவளுக்கு கண் ஆபரேஷன் செய்து கண்ணாடி வாங்கி போட்டொம். அவங்க அம்மா ஆஸ்பத்திரியிலே எங்க கைய பிடிசுக்கிட்டு அழுதுகிட்டே எங்களை ஆசீர்வாதம் பண்ணினது அப்படியே என் கண்ணுக்குள்ள இன்னும் இருக்கு.
இப்படி இன்னும் இன்னும் நிறைய ... ஒவ்வொரு நாளும் பசுமையாக நினைவில் ஓடிக்கொண்டே இருக்கிறது....

இங்கு அதில் சிலவற்றை நினைத்துப் பதிய வைப்பதில்   மகிழ்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக