என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

வியாழன், 22 டிசம்பர், 2011

ச்சீ ... வேகமாகப் போய்விடு 2011.... ஒழுங்காக வா 2012



பட்டுக் கம்பளம் விரித்து வைத்து
       பாதம் வலிக்கப் பாங்குடனே
மெட்டுக் கட்டிப் பண்ணி சைத்து
     மெல்ல வருக மகளென்றே
கொட்டும் மழையில் நனைந்த துபோல்
     குளிர்ந்து நானும் உவப்புடனே
எட்டி மகிழ்வாய் நானழைத் தேன் உனை
     இரண்டா யிரத்துப் பதினொன்றே!   (1)

எத்தனை எத்தனை எதிர்பார்ப் பென்னுள்
    விதைத்து வைத்துக் காத்திருந்தேன்
அத்தனை யும்நீ பொய்யாக்கி வெறும்
    இன்னல் களாலெனைச் சூழ்ந்தாயே!
பித்தாகி நான்போகும் படிக்கு வெறும்
    பிழையாய் நீயும் போனாலும்
அத்தனை யும்யான் பொருத்தேன்  அந்தோ
     உன்னை முழுதாய் வெறுத்தேனே!(2)

மாறும் ஆட்சி மாறு மென்றே
     மக்களும் காத்து நின்றோமே
கூறும் படியே யேதுமில் லையிந்தக்
     கூத்தா டிகையில் சிக்கியதும்
இருப்பதைத் திருத்தவும் ஈர்ப்பதை இடிப்பதும்
     கொள்கை யென்றே கொண்டதனால்
இருதலைக் கொள்ளி யெறும்பென வாகி
    எந்தமிழ் மக்கள் படுகின்றார்   (3)

படிக்கும் பாடம்  எதுவெனத் தெரியா
     பள்ளிக் குழந்தைகள் திணறியதும்
பரமக் குடியில் மக்களைத் துரத்திப்
    பாது காவலர் சுட்டதும்
துடுப்புடன் கடலில் செல்லும் மீனவன்
    திரும்பி வராமல்; தவிப்பதும்
படிப்படி யாகத் தமிழனின் பல்லைப்
     பாவிகள் பதந்தான் பாhக்கின்றார்…..(4)

பால்விலை யோடு பேருந்துக் கட்டணம்
      படபட வென்றே உயர்ந்தாலும்
காய்கறி விலையும் பெட்ரோல் விலையும்
      கிடுகிடு வென்றே உயர்ந்தாலும்
தங்கம் விலையோ தறிகெட் டார்போலத்
     தடதட வென்றே உயர்ந்தாலும்
பாழாய்ப் போன சம்பளம் மட்டும்
     பட்ட மரம்போல் இருக்கிறது  (5)

நாதி யற்ற நிலையில்  இருக்கும்
     நற்றமிழ் நாட்டைப் போலேதான்
நாலா புறமும் பாரத நாட்டில்
    நிகழ்ச்சிக ளெல்லாம் நடக்குது
திரும்பிப் பார்த்தால் ஒன்று மில்லை
      திருதிரு வென்றே முழிக்கின்றோம்
விரும்பிய மாற்றம் இதுவோ எனநாம்
     விசும்பும் சப்தம் கேட்டிடுமோ?......(6)

சேது சமுத்திரத் திட்டம் இன்னும்
    சீண்டா மல்தான் கிடக்கிறது
மோதும் அணுஉலைப் பிரச்சனை மேலும்
      வெடித்துக் கொண்டே இருக்கிறது
அதற்குள் வந்தது முல்லைப் பெரியார்
       அடிதடி யெங்கும் தொடர்கிறது
ஏது செய்து இவைமு டிப்பாரோ
       யார்க்கும்  ஒன்றும் அறியவில்லை…..(7)

இருபத் தோரு ஆண்டுகள் சிறையில்
       தண்டனைக் காலம் கழித்தபின்பும்
இறுக்கிட வேண்டும் குரல்வளை என்றே
        இழிந்த அரசியல் நடத்துகின்றார்
இலங்கைத் தமிழன் படுகின்ற பாட்டை
    இமைகொட் டாமல் பார்க்கின்றார்
சுரங்க அறையின் தங்கம் காக்க
       இராணுவத் தாரை அனுப்புகின்றார்  (8)

தொலைத் தொடர்புஊழல் பலரின் முகத்தைத்
       தெளிவா கத்தான்; காட்டிடினும்
கலகல வென்றே சிரித்துக் கொண்டே
     கம்பியின் பின்னால் நிற்கின்றார்
உண்ணா விரதம் ஒன்றே போதும்
      ஊழல் ஒழிப்பேன் எனக்கூறி
அன்னா ஹசாரே பாவம் ஏனோ
      அடிக்கடி அங்கே படுக்கின்றார்…..(9)

 ஊரில் மட்டும் பிரச்சனை யில்லை
         உலகம் முழுதும் இக்கதிதான்
பேரழி வெல்லாம் போதா தென்று
           இன்னும் பலஉயிர்; பறித்திட்டாய்
அரபு நாட்டில் மக்கள் சேர்ந்து
         அடித்து மன்னனின் உயிர்பறித்தார்
கொடுங் கோலன்தான் அவனென் றாலும்
            மக்களின் மாண்பும் மரித்ததுவே …(10)

ஆயிர மாண்டுக் கனவுக ளெல்லாம்
           ஆப்பிளில் வகுத்த ஸ்டீவ்ஜாப்;ஸை
ஆயிர மாயிரம் தூரிகை தீட்டிய
       அற்புதக் கலைஞன் ஹுசேனை
ஆயிரம்  உயிர்களை ஜப்பான் நாட்டில்
          பூகம் பத்தால் பறித்த நீதான்
ஆயிர மாயிரம் கனவுகள் சுமந்த என்
          அப்பா வையும்விழுங் கிவிட்டாய் (11)

எதற்கும்; தீர்வொன் றில்லா நிலையில்
      இவ்வாண் டைநாம் கடந்துவிட்டோம்
பதற்றம் நிறைந்த பதினொன் றேச்சீச்சீ..;
      சீக்கிரம் நீயும் சென்றுவிடு
நல்லவை மட்டுமே செய்தல் வேண்டி
      நம்பி நானும் அழைக்கின்றேன்
எல்லா நலனும் தந்திட வருவாய்
      இரண்டா யிரத்துப் பன்னிரண்டே!(12)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக