என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

வெள்ளி, 23 டிசம்பர், 2011

தூயவனைத் துதித்திடுவோம் ..!


(குவைத்தில் ஒருபாதிரியாரின் வேண்டுகோளுக்கிணங்க எழுதிக்கொடுத்த கவிதை) 

தூயகுலத் துதித்துவந்த தேவமகன் யேசுபிரான்
தூயமனத் தோடு அவன் பாதமலர்ச் சேர்வோரின் 
காயமதை காத்துதந்தன் கரங்களிலே ஏந்துகின்றான் - அந்தத்
தூயனவன் நாமந்தனைத் துய்த்துய்வோம் நாமே!

மண்ணிலுள்ள மனிதரெல்லாம் மகிமைபெற்று வாழ்ந்திடவே
எண்ணில்லா துன்பமெலாந் தந்தோளில் சுமந்துகொண்டு 
விண்ணையாளும் மகன்தந்தன் செந்நீரைச் சிந்திநின்றான் - அந்தப் 
புண்ணியனின் புகழவிளங்கப் பாடிடுவோம் நாமே! 

சுற்றுகின்ற உலகமதில் நிலையாக நின்றவனும்
சுற்றத்தோடு சேர்ந்தொன்றாய் வாழ்ந்திடவே சொல்கின்றான்
மற்றுமெந்த மனக்கசப்பும் கொள்ளாதே என்றுரைக்கும் - அந்தக் 
கொற்றவனை உயர்குரலால் கூடியழைப் போமே!

கொண்டுவரும் காணிக்கை கொடுப்பதற்கு முன்னாலுன்
சொந்தமான சோதரன்மேல் கொண்டிருக்கும் பகையெல்லாம்
இந்தநேரம் விட்டுவிட்டு எனைத்தேடி வாவென்னும் - அந்த
மந்தையாளும் மன்னவனைப் போற்றிமகிழ் வோமே!

சுகமாக நாம்வாழ உபதேசம் அளிக்கின்ற
இகவாழ்வின் துணையாக நம்முடனே இருக்கின்ற
முகமெல்லாம் ஒளியாகிப் பொலிவுடனே திளங்குகின்ற - அந்த
செகம்போற்றும் இரட்சகனைத் தொழுதுமகிழ் வோமே!

தஞ்சமென வந்தோர்க்குத் தக்கதுணை யாகியுடன்
பஞ்செனவே அவர்துக்கம் பறந்துவிடச் செய்கின்ற
வெண்சிலைபோல் பாலகனாய் வைக்கோல்மேல் துயில்கொள்ளும்- அந்தக்
கண்ணாளன் கர்த்தரொன்றே கதியென்போம் நாமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக