என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

புதன், 11 டிசம்பர், 2013

ஓரினச் சேர்க்கையாளர்கள் உரிமைகளுக்கு குரல் கொடுப்போம்.


ஓரினச் சேர்க்கை சட்ட விரோதமான செயல் என்று தீர்ப்பளித்து உச்ச
நீதிமன்றம் இன்று ஓரினச் சேர்க்கையாளர்களை Sec.377-ன் படி  கிரிமினல் குற்றவாளிகள் என அறிவித்துள்ளது. ஏற்கனவே ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு சமுதாயத்தில் மரியாதை இல்லாத நிலையில் இந்த தீர்ப்பானது இவர்களை அதிக அளவில் பாதித்துள்ளது.

இது மனித உரிமைக்கு எதிரான தீர்ப்பு. ஒவ்வொரு மனிதனுக்கும் அவன்/அவள்  விரும்பும்படியான வாழ்க்கை வாழ்வதற்கான உரிமை உள்ளது. ஓரினச்சேர்க்கை என்பது இயற்கைக்குப் புறம்பானது என்றும் இந்தியக் கலாச்சாரத்திற்கு விரோதமானது என்றும் சுட்டிக் காட்டி இவர்களை குற்றவாளிகளாக அறிவித்திருக்கும் இந்த தீர்ப்பிற்கு எதிராக ஒவ்வொரு இந்தியரும் குரல் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஓரினச் சேர்க்கையாளர்களும் நம்மைப் போன்றே அத்தனை உரிமையும் கொண்ட சராசரி  இந்திய குடிமக்களே. நம்மைப் போன்றே வரி செலுத்துகிறார்கள், ஓட்டு போடுகிறார்கள்  வருவாய் ஈட்டுகிறார்கள். இவர்களை சராசரி மக்களிலிருந்து வேறுபடுத்திப் பார்ப்பதே தவறான செயலாக இருக்கும் போது இவர்களை குற்றவாளிகள் என்று அறிவித்திருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாகவே உள்ளது.

இப்படி அறிவித்திருப்பதன் மூலம் அவர்கள் சந்திக்கப் போகும் கொடுமைகள் என்னவெல்லாமாக இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். கிரிமினல் குற்றவாளிகளுக்கு எல்லாவிதமான உரிமைகளும் பறிக்கப் படும். ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று தெரிந்தாலே சிறை செல்ல நேரிடும். சிறிய வாக்குவாதத்தில் ஈடுபட்டாலும் இவர்கள் குற்றவாளிகள் என்று அடையாளப்படுத்தப் பட்டு கடுமையான தண்டனைக்குள்ளாக நேரிடும் . காவல்துறையின் கெடுபிடிகள் அதிகமாகும்..... தங்குவதற்கு வீடு கிடைக்காது... வெளியில் சுற்றித் திரிய முடியாது... இவ்வளவு ஏன் உடல் நிலை சரியில்லையென்றாலும் மருத்துவ மனைக்குக் கூட செல்லமுடியாது. ஒரு நோயாளி ஓரினச்சேர்க்கயாளர் என்று அறிந்தால் மருத்துவர்  சாதாரண நோயாளியைப்போல் அவருக்கு சிகிச்சை அளிக்க முடியுமா? குற்றவாளி என்னும் பட்சத்தில் காவல் துறைக்கு அறிவித்தபின் தானே அவருக்கு சிகிச்சை அளிக்க முடியும்....  வேறு நாட்டிற்குச் செல்லவேண்டுமென்றால் அவர்களுக்கு விசா கூட மறுக்கப் படுமே... இப்படி அவர்கள் சந்திக்கப் போகும் பிரச்சனைகள் ஏராளம்.  நினைத்துப் பார்த்தாலே அவர்கள் மீது பரிதாபமும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீது அளவுகடந்த கோபமும் வருகிறது.

ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதுதான் இந்திய கலாச்சாரம் என்றால்  எத்தனை எத்தனை இந்தியக் கலாச்சாரங்கள் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றப்பட்டிருக்கிறது?  கணவன் மரணமடைந்தால் மனைவியை தீக்குள் தள்ளிக் கொல்லும் "சதி" என்ற வழக்கம் இந்தியக் கலாச்சாரத்திலிருந்து ஒழிக்கப்படவில்லையா? கணவனை இழந்த பெண்கள் தவறான வழிக்குச் சென்றுவிடக்கூடாது ...நமது இந்தியக் கலாச்ச்சாரம் கெட்டுவிடுமென்று அந்த வழக்கத்தை அப்படியே கடைப்பிடித்திருந்தால் இந்திரா காந்தி என்ற கைம்பெண் இந்தியப் பிரதமராக உலகம் வியக்கும் அளவுக்கு இந்தியாவை வழிநடத்திச் சென்ற வரலாற்றை இந்தியா இழந்திருக்குமே.

"சதி" என்பது எப்படி மனித உரிமைக்கு எதிரான செயலோ அது போலத்தான் ஓரினச்சேர்க்கையாளர்களை குற்றவாளிகளாக அறிவித்திருப்பதும் மனித உரிமைக்கு எதிரான செயல்.  காலத்திற்கு ஏற்றவாறு கலாச்சாரங்கள் மாறிக்கொண்டுதான் இருக்கும் அதற்கேற்ப சட்டங்களில்  மாற்றம் செய்யவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

நெதெர்லாண்ட் , நோர்வே, பெல்ஜிய,ம் ஸ்பெயின், கனடா, சௌத் ஆப்பிரிக்கா, ஸ்வீடன், போர்சுகல், ஐஸ்லாண்ட், அர்ஜென்டினா, மெக்ஸிகோ என பதினோரு நாடுகளில் ஓரினச்சேர்க்கை சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதை எல்லோரும் அறியவேண்டும்.

ஓரினச் சேர்க்கை நமக்குத் தவறானதாகத் தெரியலாம். கேலிக்குறியதாகத் தெரியலாம்.... வெறுக்கத்தக்கதாகத் தோன்றலாம்... ஆனால் ஒரு தனிமனிதன் தன விருப்பத்திற்கேற்றவாறு தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் உரிமை உடையவன் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

இந்தியாவில் 25 லட்சத்திற்கும் மேல் ஓரினச்சேர்க்கையாளர்கள் உள்ளதாக புள்ளிவிவரம் கூறுகிறது...ஒரே ஒரு தீர்ப்பின் மூலம் 25 லட்சம் இந்தியர்களை உச்சநீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்திருப்பதைக் கண்டித்து  ஓரினச்சேர்க்கையாளர்களோடு ஒன்று சேர்ந்து மக்களும் ஜனாதிபதி அலுவலகத்தின் முன் சென்று போராட்டம் நடத்த வேண்டும். ஓட்டுரிமை அட்டை, ரேஷன் கார்டு ஆதார் கார்ட், பான் கார்ட் ஆகியவற்றை வீசி எறியவேண்டும்... தீர்ப்பு  மாற்றம் செய்து அனைத்து உரிமைகளும் ஓரினச் சேர்க்கையாளர்கள் பெறும்வரை அவர்களுக்காக அவர்களோடு சேர்ந்து நாமும் குரல் கொடுக்க வேண்டும்....

இந்த தீர்ப்பில் மாற்றம் வராத பட்சத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து ஓரினச்சேர்க்கையாளர்களை ஆதரிக்கும் நாட்டிற்கு அடைக்கலமாக செல்வதற்கு விண்ணப்பிக்க வேண்டும். (Gays should apply for Asylum to gay friendly countries)  லட்சக் கணக்கான ஓரினச் சேர்க்கையாளர்கள் ஒன்று சேர்ந்து இதைச் செய்வார்களேயானால்
ஜனாதிபதியே நேரடியாக தலையிட்டு அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் செய்ய முடியும். இந்த மாற்றம் 25 லட்சத்திற்கு மேலான இந்தியர்களுக்கு எல்லா உரிமையும் கொண்ட இந்தியர்களாக வாழ வழிசெய்யும்.

அன்று அம்பேத்கர் "நான் இந்துவாகப் பிறந்தேன் ஆனால் இந்துவாக மரணிக்க மாட்டேன்" என்று கூறி லட்சக்கணக்கான மக்களோடு  இந்து மதத்திலிருந்து வெளியேறி புத்த மதம் தழுவிய புரட்சி போல இன்னொரு புரட்சியாக "நாங்கள் இந்தியர்களாகப் பிறந்தோம் ஆனால் இந்தியர்களாக மரணிக்க மாட்டோம்" என்று புதிய ஒரு புரட்சியை உருவாக்குவார்களேயானால் இந்தப் பிரச்னைக்கும் நல்ல தீர்வு கிடைக்கும்.   

விடுதலை நாளிதழில் ......
http://www.viduthalai.in/page1/72003.html







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக