நேற்று சுவேதாவை பாரதியார் இல்லத்திற்கும் அடுத்து உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கும் அழைத்துச் செல்லவேண்டும் என நினைத்து மாலை 5 மணிக்கு கிளம்பினோம் . நாங்கள் அங்கு செல்லும்போதே மாலை 6 மணி. பாரதியார் இல்லம் பார்வை நேரம் காலை 9.45 AM to 5.45 PM என்பது தெரியாததால் உள்சென்று பார்க்கமுடியாமல் போய்விட்டது. சரி இன்னொருநாள் அழைத்துச் செல்கிறேன் எனக் கூறிவிட்டு கோவிலுக்குச் சென்றோம்.
நேற்று சனிக்கிழமையாதலால் கோவிலுள் அதிகமான கூட்டம். பார்கிங்கு இடம் கிடைப்பது சிரமமாக இருந்தது. அப்போது ஒரு பூவிற்கும் சிறுவன் மிகுந்த தொல்லை செய்து எங்களை அழைத்துக்கொண்டு சென்று ஒரு பார்கிங் இடம் பார்த்துக் கொடுத்தான். அவனுடைய குறிக்கோள் எண்களின் காரை நிறுத்துவதற்கு உதவவேண்டும் என்பது நிச்சயமாக இல்லை. மாறாக அவனுக்கு தன்னுடைய பூவை இவர்களுக்கு விற்றுவிடமேண்டும் என்ற எண்ணம்தான்.
வண்டி நிறுத்திவிட்டு இறங்கியவுடனே அக்கா அக்கா பூ வங்கிக்கங்கக்கா எனக் கேட்டான். நான் சொன்னேன். நாங்க சாமி கும்பிட போகவில்லை. சும்மா போறோம்டா என்று. அக்கா அக்கா ப்ளீஸ் வாங்கிக்கோங்க எனத் தொடர்ந்து கேட்டான். சரியென்று உனக்காக ஒரே ஒரு முழம் வாங்கிக்கொள்கிறேன் என்று கேட்டால் அக்கா 2 முழம் வாங்கிக் கோங்க என்றான். சரி படிக்கும் சிறுவன் பள்ளி முடிந்து நேராகவந்து பூ வியாபாரம் செய்கிறானே என்று இரண்டு முழம் வாங்கிவிட்டேன்.
எங்களோடு மாற்று அறக்கட்டளை திரு. தமிழேந்தி அவர்களும் திருமதி. சென்னம்மா அவர்களும் வந்திருந்தனர். பூவுடன் கோவிலுக்குள் செல்கிறோம். சரி இந்த பூவை என்ன செய்வது என யோசித்துக்கொண்டே கையில் எடுத்துக்கொண்டு நடந்துகொண்டிருந்தோம்.
முதலில் யாரிடமாவது கொடுத்துவிடலாம் என்றுதான் நினைத்திருந்தேன், ஆனால் பூவைப்பற்றி பேச்சு வந்தது. சன் டிவி யில் சித்த மருத்துவர் சுப்பிரமணி அவர்கள் பூக்களின் மருத்துவ குணம் பற்றி கூறுவார் எனவும் உட்கார்ந்த இடத்திலிருந்தே தனக்கு வேண்டிய எல்லாப் பூக்களையும் அவனிடத்திற்கே வரவழைக்கத்தான் சாமிக்குப் பூச்சார்த்தும் பழக்கத்தைப் பார்ப்பனர்கள் கொண்டுவந்திருக்கிறார்கள் என்றும் பேசிக்கொண்டே நடந்தோம் .
சாமிக்குப் பூ சார்த்தினால் நமக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று உண்மையையை உணராமல் பக்தர்கள் அக்காலத்தில் காடுகளிலிருந்தும் தோட்டங்களிலிருந்தும் கல் முள் என்று பாராமல் கஷ்டப்பட்டு கொண்டுவந்தும் தற்போதெல்லாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தைக்கொடுத்து கோவில் வாசலில் வாங்கிக்கொண்டுபோய் கொடுத்துக்கொண்டிருக்கிரர்கள் எனப் பேசிக்கொண்டே இருக்கும்போது அங்கே சாமிக்கு சார்த்திய துளசி மாலைகளை வெளியே பக்தர்களுக்காக பெரிய பாத்திரத்தில் வைத்திருக்க எல்லோரும் சென்று அதிலிருந்து துளசி மாலைகளை எடுப்பதைப் பார்த்துவிட்டு சுவேதாவும் ஓடிச்சென்று ஒரு பெரிய துளசி மாலையைக் கொண்டுவந்தாள் .
அப்போத்துதான் திருமதி சென்னம்மா அவர்கள் கூறினார் துளசி மாலையைக் கழுத்தில் அரை மணிநேரம் போட்டுக்கொண்டிருந்தால் கழுத்துவலி போய்விடும் மற்றும் துளசியின் வாசம் நுகரும்போது சுவாசம் சீர்படும் என்றும். அதேபோல மஞ்சள் சாமந்திப் பூக்களை நுகர்ந்தால் ஆழ்ந்த உறக்கம் வரும் என்றும் சொல்ல.... அட இதை நாம் ஏன் வீணாக்க வேண்டும் என்று அந்த துளசி மாலையையும் மஞ்சள் சாமந்தி மாலையையும் சுவேதாவின் கழுத்தில் போட்டுவிட அவளும் அந்த மாலையை அணிந்தவாறே ஒரு குட்டி தேவதையாக கோவிலை வலம் வந்தாள். பிறகென்ன பார்த்தசாரதியைப் பார்க்கவந்தவர்களெல்லாம் இந்தக் குட்டிதேவதையையும் தரிசித்துவிட்டே கடந்தனர்.
பிறகு கருவறையில் கிரிடம் தலையில் வைத்து ஆசிர்வாதம் செய்துகொண்டிருந்தார் ஒரு அர்ச்சகர். நானும் அங்கு செல்லவேண்டும் என அவள் கேட்க சரி என அவளை அனுப்பி வைத்தோம். பிறகு வெளியில் வரும்போது அங்கே கோவிலின் சுவற்றில் திருப்பாவை பொறித்துவைத்து இருந்ததைக் கண்ட நான் சுவேதாவிற்கு
எல்லே இளங்கிளியே இன்னும் துயிலுதியோ?
மாயனை மண்ணு வடமைந்தனை மற்றும்
புள்ளும் சிலம்பின கான் புள்ளரையன் கோவிலிலே போன்ற துய தமிழ்ப் பாடல்களை நான் படித்துக்காட்ட மிக்க மகிழ்ச்சியோடும் ஆர்வத்தோடு அவற்றைக் கேட்டு அர்த்தம் புரிந்து கொண்டு புன்னகைத்தாள்.
நாங்கள் கோவிலுக்கு வந்ததற்கான அர்த்தம் அங்கே புலனானது. திருப்தியுடன் வெளிவந்தோம்.
அதேபோல பூவாங்கிக்கொண்டு கோவிலுக்குச் சென்று மாலையை சாமிக்குப் போடாமல் எங்கள்(சுவேதா) கழுத்திலேயே போட்டு சுவாமியைச் சுற்றிவந்த நிகழ்ச்சியும் நன்றாகத்தான் இருந்தது.
வரும்போது A.V கிரி (சொல்கேளான் ) அய்யா எப்போதும் " கோவிலுக்குச் சென்றேன் புளியோதரை பிரமாதம்.... சர்க்கரைப் பொங்கல் அபாரம் " என சொல்வது நினைவிற்கு வர அங்கே சென்று பிரசாதம் வாங்கினோம். அதென்னமோ சொல்லிக்கொள்வது போல் அவ்வளவு பிரமாதமாகத் தெரியவில்லை ஆனால் முறுக்கு அருமையாக இருந்தது.
கோவில் கல்வெட்டுகளில் தமிழ் சுவைத்தோததாலோ என்னமோ மற்றேதும் இனிக்கவில்லை எங்களுக்கு .
இதோ சுவேதாவின் புகைப்படங்கள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக