என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

புதன், 30 மார்ச், 2016

மேடைப் பேச்சு நாகரீகங்கள்...


தேர்தல் வந்துவிட்டது. தொலைக்காட்சியைத் திறந்தால் எல்லா சானல்களிலும் அரசியல் முழக்கங்கள்....


காலம் எல்லாவற்றையும் புரட்டிப் போடுகிறது என்று சும்மாவா சொன்னார்கள். கேட்கவே இயலாத வார்த்தைகள் ஒருவரை ஒருவர் பழித்தும் இழித்தும் பேசும் வார்த்தைகள்.... இப்படிப் பேசியா உருவானது நம் தமிழக அரசியல் கட்சிகள்?

கொள்கைப் பிடிப்பும்  இல்லை, நல்ல  கருத்துக்களைப் பரப்பவும் எண்ணம் இல்லை... இருப்பதெல்லாம் பதவி வெறியும் அதன் மூலம் பணம் கொள்ளையடிக்கும் எண்ணமுமே என்பது தெள்ளத்தெளிவாகப் புரிகிறது. 


இன்று -

அண்ணா பேசிய மேடையில் அண்ணாச்சி (இமான்).
குஞ்சிதம் குருசாமி அம்மாள் பேசிய மேடையில் குஷ்பூ.

இவர்களா  மேடைப் பேச்சாளர்கள்? இவர்களை நம்பியா தமிழக அரசியல் கட்சிகள் இயங்குகிறது? இவர்கள் பேச்சைக் கேட்டா மக்கள் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்?  என்ன  கொடுமை இது?

நேற்று குஷ்பு பேசுகிறாள் .... ஜவஹர்லால் நேரு நாட்டுக்காக உயிர் கொடுத்தாராம் ... ராஜீவ் காந்தி நாட்டுக்காக உயிர் கொடுத்தாராம்.... இந்திரா காந்தியும் அப்பட்டியே என்று சொல்கிறாள். 

இந்திரா காந்தியின் உயிர் மட்டும் தான் நாட்டுக்காகத் தன் கடமை செய்த காரணத்தால் போனது. பஞ்சாப் ஐ தனியாகக வேண்டும் என்று சீக்கியர்கள் போராட, ஆயுதங்களுடன் சென்று அவர்களின் புனிதத் தலமான பொற்கோவிலில் பதுங்கி இருந்ததால்தான் வேறு வழியின்றி தீவிரவாதிகளைச் சுட்டுக் கொல்ல ஆணை பிறப்பித்தார் இந்திரா.... அதனால் ஏற்பட்ட குரோதம் தான் இந்திராவின் மரணம்.  

தனி ஈழம் கேட்ட தமிழர்களை கொன்று குவித்ததும் IPKF ஆட்களால் பல LTTE பெண்களின் கற்பு சூரையாடப்பட்டதும் அதில் ஒருத்தியே தனு என்பதும் வெளிவந்த செய்தி..... 

ஆக இலங்கைத் தமிழர்களின் குரோதத்தின் வெளிப்பாடுதான் இராஜீவ் காந்தியின் மரணம்.

ஆ....  ஆனால் ஜவகர்லால் நேருவின் மரணத்திற்குக் காரணம் பாலியல் வியாதி.... விரிப்பாக சொல்ல விருப்பமில்லை எனக்கு.  இந்த மரணம் எப்படி நாட்டுக்காக கொடுத்த உயிர்த்தியாகமாக மாறியதோ?

அதேபோல தேதிமுக வில் பிரேமலதா வின் பிதற்றல்களையும் கேட்கவேண்டிய நிர்ப்பந்தம்.

விஜயகாந்த் பேசுவது புரியவில்லை என்கிறீர்களே  எம் ஜி ஆர் பேசியது புரிந்ததா என்று கேட்கிறார்....

நடிகவேள் எம் ஆர் ராதா சுட்டதினால் கழுத்தில் பாய்ந்த குண்டு அவர் குரலை சேதப் படுத்தியது.  அவர் பேசும்போது குரல் தெளிவில்லை என்றாலும் என்ன பேசுகிறார் என்று தெளிவாக இருந்தார். .. ஆனால் விஜயகாந்த் தான் என்ன பேசுகிறோம் என்று தனக்கே தெரியாமல் உளறிக்கொண்டிருக்கிறார். தெளிவும் இல்லை தெளிந்த சிந்தனையும் இல்லை.

இதுதான் நான் சொன்ன காலத்தின் கொடுமை. அரசியல் என்பதை  கேலிக்கூத்தாக மாற்றிவிட்டனர். யார் வேண்டுமானாலும் மேடை ஏறலாம் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று ஆகிவிட்டது. 

அன்றைய காலத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் பேசுவதைக் கேட்க காசு கொடுத்து (டிக்கெட் வாங்கி) மக்கள் கூடினர். இப்போது பிரியாணி , குவார்டர், புடவை, தண்ணீர் கைச்செலவுக்கு 200 ரூபாய்... கூட்டம் கூடிவிடுகிறது. 

இப்படி சேரும் கூட்டத்திடம் கருத்து சொன்னாலும் புரியப் போவதில்லை. கன்னாபின்னாவென்று பேசினாலும் கவலைப் படப் போவதில்லை... பின் எப்படி இருக்கும் இன்றைய மேடைப் பேச்சுக்கள்? நம்மைச் சுற்றி யார் இருக்கிறார்களோ அவர்களுக்கு ஏற்றபடிதானே பேசமுடியும்?
அதுதான் இன்றைய கால கட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
மேடைப் பேச்சு என்பது சீரழிந்து கொண்டிருக்கிறது. 


பேரறிஞர் அண்ணா தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்... அவரை எதிர்த்து டாக்டர் சீனிவாசன் நிற்கிறார்.... பிரச்சாரத்தில் அண்ணா இப்படி பேசுகிறார்...

"என்னை எதிர்த்து நிற்கும் டாக்டர் சீனிவாசன் கைதேர்ந்த மருத்துவர்...
நல்ல மனிதர். கைராசிக் காரர் என்று கூட சொல்லுகிறார்கள்  அதனால் அவர் இங்கேயே இருக்கட்டும் நமக்கெல்லாம் வைத்தியம் செய்ய. என்னை சட்டமன்றத்திற்கு அனுப்புங்கள்."

என்ன ஒரு கண்ணியமான பேச்சு ... தனிப்பட்ட தாக்குதல்களோ தரக்குறைவான விமர்சனங்களோ இல்லாமல் மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் பேச்சுக்களல்லவா இவை? 

ஆனால் அண்ணா வளர்த்த கட்சி - கலைஞர் வளர்த்த கட்சி - அன்று வளர்த்தது போல் கட்சியையும் பேச்சாளர்கள்களையும்  வளர்க்கவில்லை என்பது உண்மை. இதுவே கட்சிகளின் வீழ்ச்சிக்கும் காரணம் என்பதுதான் உண்மை. 

இனியாவது அரசியல் மேடைப் பேச்சாளர்களுக்கு அண்ணாவின் மேடைப் பேச்சு உத்திகளையும் நுணுக்கங்களையும் கற்றுக்கொடுத்து மேடைக்கு ஏற்றுங்கள்.  குவார்ட்டரும்  பிரியாணியையும் குடலுக்குள் அனுப்புவதை தவிர்த்து நல்ல கருத்துக்களையும் சிந்தனைகளையும் மூளைக்கு அனுப்புங்கள்.

- லதாராணி பூங்காவனம் 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக