என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

திங்கள், 4 ஏப்ரல், 2016

பெரியமருதுவும் ஆர்க்காட்டு ரூபாயும்


"வெள்ளியினால் செய்யப்பட ஆர்க்காட்டு ரூபாய் ஔரங்க சீப்பின் 
மகன் மற்றும் பேரன் ஆகியோர் காலத்தில் வெளியிடப்பட்டது : ஆலம் கீர், ஷா ஆலம் என்ற பெயரில் வெளியிடப்பட்ட அந்த வெள்ளி ரூபாய் 5 மில்லிமீட்டர் கனமும் 5-6 சென்டிமீட்டர் குறுக்களவும் கொண்டதாக இருக்குமாம். இந்த வெள்ளிக் காசுகளைத்தான் முகலாயர்களுக்குக் கீழிருந்த ஹைதராபாத் நிஜாம் மற்றும் ஆர்க்காட்டு நவாப் மேலும் அவர்களின் பிரதிநிதிகளாக விளங்கிய கிழக்கிந்தியக் கும்பினியாரும் கரன்சியாகப் பயன்படுத்தினார்களாம்.

இத்தனை கனமான அந்த ஆர்க்காட்டு வெள்ளிக் காசை சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்களில் மூத்தவரான பெரிய மருது ஒரே கையில் ஆட்காட்டி விரல் மற்றும் நடுவிரல் ஆகியவற்றின் மீதுவைத்து தன் பெருவிரலால் அழுத்தி வளைத்து விடுவாராம்,

மானங்காத்த மருது பாண்டியர் என்ற நூலில் பேராசிரியர் சஞ்சீவி அவர்கள் இப்படி எழுதுவார்.. கும்பினியாரை எதிர்த்து போர் நடந்துகொண்டிருந்த சமயம் அன்று இரவு காளையர் கோவிலை அடுத்துள்ள காளையார் மங்கலத்தில் மருது பாண்டியரும் ஊமைத்துரையும் நடுக்காட்டில் நள்ளிரவில் கூடினர்.... அவர்களைச் சுற்றியிருந்த கூட்டத்தைக் கண்டு ஊமைத் துரை "வெற்றி  இல்லையேல் சாவு" என கேட்டுக்கொண்டிருந்தவர்களின் உடம்பெல்லாம் கொதிப்பேரும்படி அந்த வீரப் பெருமகன் பேசிக்கொண்டிருக்கையில்... ஆரவாராத்துடன் அனைவரும் எழுந்திருக்க ,....

பெரிய மருது எழுந்தார் ....அனைவரும் அமைதியாக அமர்ந்தனர்.

ஒரு வெள்ளி நாணயத்தை எடுத்துச் சுண்டிக் காட்டினான்  பெரிய மருது. அதைக் கீழே இட்டுக் காலால் மிதித்தான். மீண்டும் கையில் எடுத்தான். " பார்த்தீர்களா வெள்ளிப் பணத்தை? இதில் இருப்பது தமிழ் எழுத்தா?
தமிழ் இலச்சினையா(முத்திரை)?இல்லை இது கம்பெனியான் பணம்
இந்தப் பிச்சைக் காசுக்கு ஆசைப் பட்டு நம்மவர் அறிவை விற்கின்றனர் அருமைத் தாயினும் சிறந்த நாட்டின் மானத்தைக் காற்றில் பறக்க விடுகின்றனர். வீரர்களே, இந்தப் பணத்தைத் தீண்டாதீர்கள் ! காறி உமிழுங்கள்! நமக்கு காசன்று பெரிது என்று கூறிக்கொண்டே அந்த வெள்ளி நாணயத்தை இரண்டாக வளைத்தான்.அதைக் கண்ட தமிழ் மறவர் தோள்தட்டி எழுந்தனர் எட்டுத்திக்கும் செல்லுங்கள் விடுதலைக் கனலை மூட்டுங்கள் விடுதலை ! விடுதலை! என்று ஆவேசத்துடன் கூவினான் பெரிய மருது ..."

ஹப்பா... உடல் வலிமையையும் வீர உணர்வும் ஒருங்கே கொண்ட மருதுபாண்டியர் வரலாற்றைப் படிக்கும்போது தமிழன் என்ற பெருமிதம் வரத்தானே செய்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக