என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

சனி, 3 ஜூன், 2017

"கருணாநிதி" என்னும் ஐந்தெழுத்து மந்திரம்



முத்தமிழ் வித்தகர் "தமிழக முதல்வர்" கலைஞர் கருணாநிதி....

ஆம், எப்போதும் போல் தெரிந்தே தான் சொல்கிறேன் ..ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும் தமிழகத்தின் முதல்வர் என்ற உயர் பீடத்தில் கலைஞர் மட்டுமே அமர்ந்திருப்பதாகத்தான் எப்போதுமே எங்களுக்குத் தோன்றும்.

பேரறிஞர் அண்ணாவின் பேச்சுக்குப் பின் ஓர் அக்கினிப் பறவையாய் அனல் கக்கும்  மேடைபேச்சும் கனல் கக்கும்  எழுத்தாணியுமாய் வளமுடன் வலம்வந்து  - ஆதிக்க வர்க்கத்தினரையும் அதிகார வர்க்கத்தினரையும் அச்சமூட்டி  அச்சச்சோ... இந்த இளைஞனை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்று அன்றே அவர்களையெல்லாம் அடிவயிற்றைப் பிசைய வைத்தவர்.

இதோ அன்றைய அந்த இளைஞன் இப்போது 94 வயது முதியவராக,  சட்டசபையில் நுழைந்து இன்று 60 ஆண்டுகள் நிறைவுற்ற மாமனிதராக நிற்கிறார் .

இன்றும் அதே கலக்கத்தோடுதான் இந்த முதியவரை, இந்த இராச தந்திரியை, இந்த மாபெரும் சக்தியை எப்படி எதிர்கொள்வது என்று விழிபிதுங்கி இருக்கிறார்கள் .

எத்தனை எத்தனை துறைகள்? அரசியல், திரைப்படம், இலக்கியம் , நாடகம், எழுத்து, பேச்சு... அப்பப்பா.... தொட்டுப்பார்த்த  எல்லாத்துறைகளையும் துலங்க வைத்த இந்த புகழுக்குரிய "கலைஞர்" என்றுமே எனக்குப் புதிராகவே உள்ளார்.

ஆமாம் அவ்வையின் வாக்கைக் கூட பொய்யாக்கியவர் அல்லவா நம் கலைஞர்.

எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது.  தூக்கணாங் குருவியின் கூடு , கரையான் புற்று, தேன் கூடு, சிலந்திவலை ஆகிய எல்லாவற்றையும் ஒருவராலேயே கட்டிவிட  முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றில் தான் திறமை வாந்தவராக இருப்பார்கள்.  என்றாள் நம் அவ்வைப் பாட்டி.

ஆனால் எல்லாவற்றிலும் திறமையானவராக தனித்துவம் மிக்கவராக இவர் மட்டும் எப்படி இருக்கிறார் என்றல்லவா நம்மைப்போலவே எதிரிகளும் வியக்கிறார்கள்.

தமிழை சமஸ்கிருதம் விழுங்கிக்கொண்டிருந்த காலத்தில் வறண்ட ஆற்றில் புது வெள்ளம் பீறிட்டுப் பாய்ந்தது போல் கலைஞரின் தமிழ் பொங்கிப் புரண்டது ஏடுகளில். இவரின்  எழுத்து நடை எல்லோரையும் ஈர்த்தது . சொற்களின் நயமோ  பித்தாக்கியது.

மழைக்குத் தெரியாது எத்தனைத் துளிகளை இந்த மண்ணில் சிந்தினோம்  என்று. ...

மண்ணுக்கும் தெரியாது எத்தனை விதைகளை இந்த பூமியில் முளைக்க வைத்தோம் என்று.

அப்படித்தான் கலைஞருக்கும் தெரியாது எத்தனை  பேரைத்  தன் எழுத்தால், பேச்சால், செயலால் தன்பக்கம் ஈர்த்தார் என்று.

எடுத்துக்காட்டாய் "பராசக்தி" திரைப்படத்தின் வசனங்கள் ஒன்று போதும்.

தமிழ்த் திரைத்துறையையே  நிரந்தரமாய் நிமிர்த்தியதல்லவா இப்படம்.  இன்றுவரை அந்த வசனங்களை மிஞ்சியதாய் வேறேதும் உண்டா?.

வசனங்களோ அவை? தமிழர் சமுதாயத்தையே நீண்டகால உறக்கத்திலிருந்து எழச்செய்தவை அல்லவா?  பூசாரியை " அடேய்... பூசாரி..." என்று அழைத்த துணிச்சல் இந்த பெரியாரின் பக்தனைத் தவிர யாருக்கு வந்தது?

பெரியார், அண்ணா, கலைஞர் - இவர்களே கழகத்தின் மூவேந்தர்கள்.
மூவரும் ஒன்றுதான் ... ஆம்,

மரம் ஒன்றுதான் --அதன் கிளைகள் மூன்று
ஊற்று ஒன்றுதான் - அதன் ஓடுபாதைகள் மூன்று
மொழி ஒன்றுதான் -  அதன் குரல்கள் மூன்று

மொழிக்காக,  இனத்துக்காக, நாட்டிற்காக போராடிப் போராடி - வாதாடி வாதாடி - வழக்காடி வழக்காடி - இதோ 94 வயதில் வந்து நிற்கிறார். ஆனால் இன்று முதுமையை எள்ளி நகையாடி, அவர் செய்த சாதனைகளை கொச்சைப்படுத்தி அதில் இன்பம் காண்பவர்களுக்குச் சொல்கிறேன்...

முதுமை என்பது வரம். எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடக்கூடியதல்ல.  பகுத்தறிவும், கூர்த்த மதியும், மன உறுதியும் , தமிழ்ப் பற்றும் , தன்னம்பிக்கையும்,  மக்கள் நலனும்  கொண்டவர்களுக்கே வாய்த்திருக்கிறது.

கலைஞர்  தமிழ் மக்களின் சுவாசக் காற்று . தமிழ்த்தாகம் கொண்டோருக்கு நன்னீர் ஊற்று.

இனி ஒரு தலைவன் இப்படிப் பிறக்கப்போவதில்லை.  இனி ஒரு எழுத்தாளன் இப்படி எழுதப்போவதில்லை, இனி ஒரு குரல் இப்படி பேசப்போவதில்லை, இனி ஒரு அரசியல்வாதி இப்படி ஆளப்போவதில்லை... உண்மை. "கலைஞருக்கு நிகர் கலைஞரே".

வசைபாடுங்கள்...வரவேற்கிறோம்....காரணம்,   உங்கள் வசை வேருக்கு ஊற்றும் நீர்போல், மண்ணுக்கு இட்ட உரம் போல் கலைஞரின் புகழை மேலும் மேலும் செழிப்பாக்கும்.

உங்கள் வசையால் அவரை வெல்ல முடியாது. வசைக்கு அஞ்சுபவரல்ல  இந்த அஞ்சுகத்தின் மகன். காரணம் இது பட்டை தீட்டிய வைரம்.  எத்தனையோ  வெட்டுக்கள் பட்டுப் பட்டுத்தான் இன்று இப்படி ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.

இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பே வள்ளுவன் சொல்லிவிட்டான். கலைஞருக்காகதான் ..

"சொலல் வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை 
இகல்வெல்லல்  யார்க்கும் அரிது. " 

ஆம், அரிது ...அரிது.... இவரை வெல்வது அரிது. இவர்போல் இன்னொருவர் பிறப்பதும் அரிது. 

"கருணாநிதி" என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தமிழர் நாவிலிருந்து நீக்குவதும் அரிது!

வாழ்க கலைஞர் புகழ்!  வாழ்க வைரவிழா நாயகன்!

     
- லதாராணி பூங்காவனம், ஆர்க்காடு.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக