சமீபத்தில் வெளியாகி மிகுந்த சர்ச்சைக்கு உள்ளான லட்சுமி என்ற குறும்படம் சொல்லும் கருத்து நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒரு சராசரி நடுத்தரக் குடும்பத்துப் பெண் லட்சுமி. அவள் கணவன் லேத்தில் வேலை செய்கிறான். குடும்பச் சுமையைப் பகிர்ந்து கொள்ள அவளும் பிரின்டிங் பிரஸ்ஸில் வேலைக்குச் செல்கிறாள்.
எல்லா நடுத்தரக் குடும்பத்தில் நடக்கும் அதே வாழ்க்கைச் சூழலில் குடும்பம் நகர்கிறது. ஆண் என்பவன் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற ஒரு சமுதாயக் கட்டமைப்பில் பெரும்பான்மையான குடும்பங்களில் இருக்கும் குடும்பத்தலைவனைப் போலவே வீட்டு வேலைகளை மனைவி மட்டுமே செய்ய வேண்டும் என்ற அதே மக்கிப்போன கருத்தை மூளையில் புகுத்தி வளர்க்கப்பட்டவனாகவே லட்சுமியின் கணவனும் சித்தரிக்கப் பட்டிருக்கிறான்,
காலையில் எழுந்து காபி போடுவதிலிருந்து சமைத்து துவைத்து வீடு திருத்தம் செய்து பள்ளிக்குச் செல்லும் பிள்ளையைத் தயார் செய்து அவனை பள்ளிக்கு அனுப்பி கணவனை வேலைக்கு அனுப்பிவிட்டு இவள் வேலைக்குச் சென்று நாள் முழுவதும் ஓய்வின்றி வேலை செய்து வீட்டிற்குத் திரும்பி மீண்டும் இரவு உணவு தயார் செய்து கணவனுக்கும் பிள்ளைக்கும் பரிமாறி வீட்டு வேலைகள் முடித்துவிட்டு இரவு உறங்கச் செல்லும்போது , படுக்கையில் கணவன் தன்னுடைய தேவையில் மட்டும் நிறைவடைந்தவனாய் உறங்கிவிடுவதும் அதே அறையில் பிள்ளையும் உறங்க தன்னுடைய உடல் தேவையைக்கூட நிறைவேற்றிக் கொள்ளமுடியாதவளாய் உறங்கிவிடும் லட்சுமியின் வாழ்க்கை ஒவ்வொருநாளும் தொடர்கதையாகிறது.
இந்த நிலையில் வேலைக்குச் செல்லும் அவள் இரயில் பயணத்தில் சந்திக்கும் இளைஞனைப் பார்த்துப் புன்னகைப்பதும், திடீரென ஒருநாள் வேலை முடிந்து வீட்டிற்குச் செல்லும் நேரம் ஸ்ட்ரைக் நடக்க பஸ், இரயில் என அனைத்து சேவைகளும் முடங்க தன்னுடைய கணவனை வந்து அழைத்துச் செல்லுமாறு தொலைபேசியில் அழைக்கிறாள்.
அவளை வந்து அழைத்துச் செல்லமுடியாதென அவன் கூற என்ன செய்வதென்று யோசித்துக்கொண்டு அங்கிருக்கும் நாற்காலியில் அமர்ந்திருக்கும்போது இரயிலில் பார்த்துப் புன்னகைத்த இளைஞன் அவள் பக்கத்தில் வந்தமர்ந்து என் பெயர் கதிர் உங்க பெயர் என்ன என்று கேட்கிறான். "லட்சுமி"என்கிறாள்.
தாமரையில் இருக்கும் லட்சுமியைவிட அழகா இருக்கீங்கன்னு சொல்றான்.
அவ்வளவுதான். அடுத்து ஒரு பாரதியார் கவிதை. அம்மா வீட்டில் தங்கறேன்னு பொய் சொல்லிட்டு கதிர் வீட்டுக்குப் போய் இரவு தங்கி அவனோடு படுக்கையைப் பகிர்ந்து கொள்கிறாள் லட்சுமி.
உடல் சார்ந்த விஷயம் மட்டுமேதான் பெண்களின் மனநிலையை சமன் படுத்தும் என்பது போன்ற கருத்தை மைய்யப்படுத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மனைவியைக் கொடுமைப் படுத்துபவனாகவோ, குடிகாரனாகவோ, மனைவியின் நடத்தையில் சந்தேகப் படுபவனாகவோ இல்லை லட்சுமியின் கணவன். அப்படி ஏதாவது தீர்க்க முடியாத பிரச்சினை இருந்திருந்தால் விவாகரத்து செய்துவிட்டு அவளுக்கு ஏற்றபடியான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.
நாள் முழுவதுமான உழைப்பு, களைப்பு என்ற இயந்திரத் தனமான வாழ்க்கைதான் அவனுடைய வாழ்க்கையும்.
ஆறு அல்லது ஏழு வயது மகனுடன் ஒரே அறையில் உறங்கும் சூழலில் நெருக்கமாக மனம் விட்டுக்கூட பேச முடியாது என்ற நிலை உள்ளவனை பெண்டாட்டியின் உணர்ச்சிகளை மதிக்கத் தெரியாதவன் என்று அவனை குறை சொல்ல முடியாது.
இப்படிப்பட்ட குடும்பச் சுழலில் லட்சுமி வீட்டு வேலைகளில் தனக்கு உதவும்படி தன் கணவனைக் கேட்டிருக்கலாம். அதே போல தன்னுடைய உடல் சார்ந்த தேவையைத் அவனிடம் மனம் விட்டுப் பேசி இருக்கலாம். உடல் தேவை முக்கியமென்று உணரும் பட்சத்தில் ஓரிருநாள் அவள் மகனை அவள் அம்மா (பாட்டி) வீட்டிற்கு அனுப்பி வைத்து தங்களுக்கான தனிமையை ஏற்படுத்தி இருந்திருக்கலாம்.
இதையெல்லாம் விட்டுட்டு இரயிலில் பார்த்தவன் பாரதியார் பாடலைப் பாடியதில் மயங்கி ஒரே நாளில் அவனோடு படுக்கையைப் பகிர்ந்து கொண்டாள். இவள் பாரதி கண்ட புதுமைப்பெண். ஆணுக்குப் பெண் சமம் என்றெல்லாம் ஒரு சப்பைக்கட்டு கட்டுகிறது இந்தப் படம்.
அவனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு போல இவளுக்கு ஒரு பாரதியார் பாடல் என்று கீழ்த்தரமான கருத்துக் பதிவுதான் இந்த படம் நமக்குச் சொல்கிறது.
இதில் தன்னுடைய தவறை உணர்ந்தவளாக கதிரை தவிர்க்கும் பொருட்டு "நாளைல இருந்து பஸ்ல போறேங்க"என்று சொல்வதாக கதை முடிகிறது.
நாளை முதல் லட்சுமி பஸ்ஸில் போனாலும் அவளுடைய அதே இயந்திரத்தனமான வாழ்க்கைதானே தொடரப்போகிறது? மறுபடியும் கொஞ்ச நாளில் இந்த வாழ்க்கையில் விரக்தி ஏற்படும்போது இரயிலில் பாரதியார் கவிதையோடு வந்த கதிர் போல வைரமுத்து கவிதையோடு பஸ்ஸில் ஒரு சுதிர் வரமாட்டான் என்பது என்ன நிச்சசயம்?
இது இல்லை பெண் விடுதலை. இது இல்லை பெண்கள் முன்னேற்றம்.
பெண்கள் சுயமரியாதையோடு வாழவேண்டும்; அதற்கு அவர்கள் மனதளவில் முன்னேற வேண்டும்.
நீங்க அழகா இருக்கீங்கன்னு சொன்னவுடன் பூரிப்படைந்து தன்னை இழந்த லட்சுமி நிச்சயமாக பாரதி கண்ட புதுமைப்பெண் இல்லை.
இதுபோன்ற படங்களெல்லாம் சமுதாயத்திற்கு ஆபத்துதான் விளைவிக்கும் நல்ல சிந்தனையை அல்ல.
- லதாராணி பூங்காவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக