என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

வியாழன், 7 டிசம்பர், 2017

டாக்டர் அம்பேத்கார், சென்னை வந்தார்! தந்தார்!சென்றார்!


 

தந்தை பெரியாரின் அழைப்பிற்கிணங்கி முதன் முறையாகச் சென்னை வந்த டாக்டர் அம்பேத்கார் ஆற்றிய சொற்பொழிவு குறித்து பேரறிஞர் அண்ணா அவர்கள் 01-10-1944 அன்று "திராவிட நாடு" பத்திரிக்கையில் எழுதியது.  


வந்தார்! தந்தார்! சென்றார்! 

ஆம்! வந்தார்! தந்தார்! சாதுக்களும் சங்கராச்சாரிகளும், பண்டாரங்களும் வந்தால், சீரும் நகண்டும் தருவர். ஆசிகூறுவர், எதற்கு? காசுபறிக்க! டாக்டர் அம்பேத்கார், சென்னை வந்தார், கசையடி தந்தார் காரியக் கூத்தாடும் ஆரியருக்கு. புன்னகை தந்தார். பகுத்தறிவு இயக்கத்துக்கு. சென்னை ஆரியப் பத்திரிகைகள் அலறுகின்றன. அகராதியைப் புரட்டிப் புரட்டித் தேடுகின்றன.  அம்பேத்காரை வசைபாட  கடுமொழிகளுக்காக!

பண்டை நாள்தொட்டு இன்றுவரை வேதகால முதற்கொண்டு வெள்ளையன் காலம்வரை நவநந்தர்கள் நாள்தொட்டு, நமது காலம் வரையிலே, இந்நாட்டிலே. பார்ப்பன குலம், ஆளும் வர்க்கமாக இருந்து மற்றவரை ஆட்டிப்படைத்து வரும் அநீதியை, டாக்டர் அம்பேத்கார் அழுகுற எடுத்துரைத்தார்.

ஆனால் கூட்டமே! ஆரியக்கூட்டமே! ஆளும் ஆண்மை அறிவுக்கு ஒவ்வாத சிந்தனையின் பாற்படாத செயெலும் கொண்ட, உங்கள் செய்தியை டாக்டர் அம்பேத்தார் சென்னை வந்தார். நாட்டவருக்கு எடுத்துத் தந்தார். கேட்டீர் அம்மொழியை, வட்டிலே கூடிக்கொண்டு கூவுகிறீர், நாட்டு நிலை அறியாமல்! ஏட்டுச்சுரை இன்னமும் கறிக்காகும் என்று எண்ணுகிறீர். மாறுவீர் இனி, என்று கூறுகிறோம். சீறிப் பயன் இல்லை!

இந்த டாக்டர் இப்படி எல்லாம் பேசுவதா என்று எழுதிப் பயனில்லை! கண்டனத்
தலையங்கத்தைத் தீட்டிப் பயனில்லை. அவர் வந்தார், யாருக்கு எதைத் தரவேண்டுமோ தந்தார், சென்றார்!!

அவர் மட்டுமா, அறிவும் அதற்கு அரணாக ஆண்மையும் கொண்டவர் எவரும் உள்ளொன்று வைத்துப புறமொன்று பேசார்! ஆரியத்தால் விளைந்த கேடுகளை எடுத்துக் கூறக் கூசார்.

பார்ப்பணியத்து வைரியாகப், புரட்சி இயக்கமாக, புத்த மார்க்கம் தோன்றியதையும், அந்தப் புது இயக்கம் நசித்துவிட்டதால், பழையபடி பார்ப்பனியம், தலைதூக்கி ஆடியதையும், டாக்டர் தெளிவாக் கூறினார். வரலாறு அறிந்தோர் இதனை நன்கு அறிவர். இதனைத் தைரியமாகச் சென்னைப் பதிதிரிகை உலகின் நிலை தெரிந்தும் அதுபற்றித் துளியும் கவலைப்படாமல் எடுததுக் காட்டிய டாக்டர் அம்பேத்காரின் ஆண்மையை நாம் பாராட்டுகிறோம்.

பகுத்தறிவாளன் பயங்கொள்ளியல்லர்! புகழ் மாலையும் இகழ்ச்சி ஓலையும் இரண்டாலும் அவரை இயக்கவோ, வெளியிடவோ அவன் அஞ்சான் இந்த இயல்பிலே தேறிய டாக்டர் அம்பேத்காரிடம், ஆரியப் பத்திரிகைகள் சீறினால் என்ன, சிரித்தால் என்ன?.
அவர் வந்தார் வேண்டியதைத் தந்தார். அடிபட்ட மந்தி ஆஊ எனக் கூவிக் கிளைக்குக்கிளை தாவி ஆலின் விழுதைப் பாம்பென எண்ணிக் கூவி, பாம்பைப்  பழுதையென்று கருதிப் பிடித்துக கடிபட்டு ஓடுவது போலக் கட்டு உடைபடுகிறதே என்ற கலக்கத்தால் கூவும் பத்திரிகைகளை நாம் பொருட்படுத்தவில்லை.

நமது டாக்டர் அம்பேத்கார், சட்டை செய்பவரல்லர். அந்தப் பத்திரிகைகள், டாக்டர் அம்பேத்காரிடம், அன்பு காட்டுமென்றோ நேர்மையிலே மனம் செலுத்துமென்றோ நாம் என்றும் எதிர்பார்த்ததில்லை. பேய்ச்சுரையை நாம் இன்புடைத்து என்று கருதோம். பேதைமை கொண்டவனிடம் பெருங்குணத்தைக் காண முடியும் என்று எண்ணோம். ஆரியப் பத்திரிகைகளிடமிருந்து, புரட்சி வீரர்கள் ஆசியையோ ஆதரவையோ எதிர்பார்க்க மாட்டார்கள்.

எனவே, டாக்டர் அம்பேத்கார், இந்த ஏடுகளைப் பற்றிக்கவலையின்றி, வந்தார், தந்தார்! தழும்பைத் தடவிக் கொண்டிருக்கும் அந்த வர்க்கமும் அது இன்றுவரை கொண்டுள்ள முறைக்கு முடிவு காலம் விரைந்து வருவது கண்டு முகாரி பாடுகிறது. பாடட்டும்! பக்க மேளமும் தேடட்டும்! நாம் கவலை  கொள்ளவில்லை, நாம் களிப்படைகிறோம், நமது பகுத்தறிவுச் சிங்கம், டாக்டர் அம்பேத்கார், வந்தார், வஞ்சனைக்காரருக்கு வட்டியும் முதலுமாகத் திருப்பித் தந்தார் என்பதை எண்ணி!


- அறிஞர் அண்ணா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக