அண்ணா தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது 1968 ஆம் ஆண்டு அமெரிக்க யேல் பல்கலைக்கழகத்திற்குச் (Yale University) செல்லும்போது தன்னுடைய பயணத்தை வாடிகன் வழி அமைத்தார். அங்கு, போப் பால் VI ஐச் சந்தித்து, போர்த்துகீசிய சிறையில் இருக்கும் கோவா விடுதலைப் போராட்ட வீரர் மோகன் ரானடேவை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கையை வைத்தார்.
பேரறிஞர் அண்ணாவின் மனிதநேயமிக்க இந்தக் கோரிக்கையை ஏற்று வாடிகன் போப் ரானடேவின் விடுதலைக்கு ஆவண செய்வதாக வாக்குறுதி கொடுத்தார். அதன் படியே 26 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரானடே 13 வருடங்கள் போர்ச்சுகல் சிறையில் கழித்த நிலையில் 1969 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்.
சரி இந்த ரானடே யார்?
இந்தியா சுதந்திரம் அடைந்தபோதே கோவாவும் விடுதலை பெற்றுவிடும் என்று நினைத்திருக்க, போர்த்துகீசியர்கள் கோவாவிற்கு விடுதலை கொடுக்கவில்லை. காரணம், கோவா போர்த்துகீசியர்களுக்கும் காங்கிரஸ் ஆதரவு பெற்ற பஹாத்கார்களின் ஆதிக்கத்தில் இருந்தது. அதனால் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு கோவாவின் விடுதலைக்கு போதுமான ஆதரவு தரவில்லை. அதனால், பார்ப்பனர்களின் துரோகத்தால் கோவாவில் விடுதலைப் போராட்டம் துவங்கியது.
1945 இல்இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் ஹேமத் சோமன் என்ற போராளி இடால்காவ் அரண்மனையில் இந்திய தேசியக் கோடியை ஏற்றி இருக்கிறார். ஆனால் கோவாவை மீட்க இந்திய ராணுவம் வரப்போவதில்லை என்பதை அறிந்த போர்த்துகீசியர்கள் ஹேமந்த் சோமனை அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். அனால் இந்திய அரசு இந்தச் செயலைக் கண்டிக்கவும் இல்லை, கண்டுகொள்ளவும் இல்லை.
அதனால் இதுவரை இந்திய அரசுக்கும் கோவா மக்களுக்கும் பயந்திருந்த போர்த்துகீசிய அரசு மிக்க பலம் வாய்ந்தவர்களாக மாறி இன்னும் தீவிரமாக மக்களைத் துன்புறுத்த ஆரம்பித்தனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஷங்கிலி என்ற ஊரில் பிறந்த ரானடே, பள்ளியில் படிக்கும்போதே இந்திய சுதந்திர போராட்டங்களையும் மக்கள் மீது செயல்படுத்தப்படும் வன்முறைகளையெல்லாம் கவனித்து வந்திருக்கிறார்.
இவருக்கு 12 அல்லது 13 வயதாக இருக்கும்பது 1942 இல் Quit India Movement இல் காந்தியடிகளைக் கைது செய்தபோது அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் மும்பையில் உள்ள திலக் மெமோரியலில் ஒன்று கூடி மாபெரும் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் முதன்முதலாக ரானடேவும் வேடிக்கை பார்க்கும் ஒரு சிறுவனாகத்தான் கலந்து கொண்டிருந்திருக்கிறார் அப்போது காவலர்கள் ஈவு இரக்கமின்றி துப்பாக்கியால் பொதுமக்களைச் சுட்டுத் தள்ளினார்.துப்பாக்கிச் சூட்டில் தன்னுடைய கண்முன்பாக பலர் காயமடைந்ததையும் ஒரு போராளி உயிரிழந்ததையும் முதன்முதலாகப் பார்க்கிறான் சிறுவன் ரானடே.
அடுத்த சில தினங்களிலேயே "சனிக்கிழமை வாரச் சந்தை" நடந்துகொண்டிருக்கும் போது நிறைய இளைஞர்கள் கையில் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களோடு ஓடி வருவதைப் பார்த்த ரானடேவும் அவர் நண்பர்களும் என்ன நடக்கப்போகிறதோ என்ற ஆவலில் அவர்கள் பின்னாலேயே ஓடி இருக்கிறார்கள்.
அவர்கள் சிறையில் இருந்த விடுதலை போராட்ட வீரர்கள் என்பதையும், "வசந்த தாதா பட்டேல்' மற்றும் ஹிண்டுராவ் பட்டேல்' என்ற இருவர் தலைமையில் சிறைக்காவலர்களை அடித்துத் தூணில் கட்டிப்போட்டுவிட்டு அங்கிருந்த ஆயுதங்களையெல்லாம் எடுத்துக்கொண்டு வெளியேறியவர்கள்,
காவலர்களிடமிருந்து தப்பி ஓடுவதைத்தான் நண்பர்களுடன் கவனித்துக்கொண்டிருந்தார்.
வயல்வெளிகளைக் கடந்து அவர்கள் போகும்போது ஒரு போராளி தவறி சேற்றில் விழுந்து இருக்கிறார். அவர் சுதாரித்து எழுவதற்குள் போலீஸ் அவரைச் சுட்டு வீழ்த்துகிறது.
இப்போது இரண்டாவது முறையாக ஒரு போராளி தன் கண்முன்பு உயிரிழந்ததைக் கண்டார் ரானடே. இவ்விரு நிகழ்ச்சிகளே தானும் போராட்டங்களில் கலந்துகொண்டு நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற எண்ணத்தை விதைத்தது ரானடேவுக்கு.
இதற்குப் பின்புதான் 1946 ஆம் ஆண்டு இந்து முஸ்லீம் பிரிவினை வேண்டி முஸ்லீம் லீக் தீவிரமாக இருந்தது. இந்துக்களை கொன்று குவித்த கிழக்கு வங்காளத்தில் நடந்த நவகாளி இனப்படுகொலையின் போது ரானடேவும் அவர் நண்பர்களும் பெற்றோர்களிடம் கூட சொல்லாமல் பாம்பே சென்றுவிட்டார்கள்.
பம்பாய் (மும்பை) சென்ற இவர்கள், தங்கள் வழிகாட்டியாக (Role Model) விளங்கிய வீரசவர்காரைச் சந்தித்துத் தாங்களும் போராட்டத்தில் கலந்து கொள்ள விரும்புவதாகச் சொல்கிறார்கள். அப்போது சாவர்கர், முதலில் படிப்பை முடித்துவிட்டு பிறகு அரசியலுக்கோ சமுதாய சேவைக்கோ வாருங்கள் என்று அறிவுரை கூறினாராம்.
உடனே ரானடே, அதென்ன, நீங்களும் படிக்கும்போதே அந்நிய துணிகளையெல்லாம் கொளுத்தி போராட்டம் செய்தீர்கள், எத்தனையோ மேடைகளில் நெருப்பு தெறித்துபோல் பேசி இருக்கிறீர்கள். பள்ளியில் படிக்கும்போதே 'ஹிந்து முஸ்லீம் போராட்ட'த்தில் கலந்திருக்கிறீர்கள் இப்படி நீங்களே இதையெல்லாம் பின்பற்ராமல் இருந்துவிட்டு எங்களை மட்டும் ஏன் தடுக்கிறீர்கள் என்று கேட்டார் .
ரானடே பேசுவதை அமைதியாகக் கேட்ட சாவர்கர் பல அறிவுரைகள் கூறி, "பகைவனை அவன் இடத்திற்கு தேடிப் போய்ச் சண்டையிடக்கூடாது. நம் இடத்திற்கு அவன் வரும்போது அவனை விடக்கூடாது' என்று சொல்லி மாணவர்களைத் திருப்பி அனுப்பி இருக்கிறார்.
அதற்குப் பின் ரானடே ஹைதராபாத்திற்குச் சென்று மெட்ரிகுலேஷன் தேர்வுபெற்று சொந்த ஊர் ஷங்கிலிக்கு திரும்பி வரும்போது கோவாவின் மிக மோசமான நிலைமையைக் கண்டு மனம் நொந்தார். ஹைதராபாத்தில் படித்துக்கொண்டிருக்கும்போதே கோவாவில் நடக்கும் அடக்குமுறைகளையும் அத்துமீறல்களையும் தினசரி செய்தித்தாள்களில் படித்தும், நண்பர்கள் இவருக்கு எழுதும் கடிதம் மூலமாகவும் அறிந்து மனம் கலங்கினார்.
இப்போது அவற்றையெல்லாம் நேரடியாகக் கண்டபோது மனம் கொதித்தது. பேசுவதற்கு உரிமையில்லை, மேடை போடக்கூடாது, கூட்டம் நடத்தக்கூடாது என்று எல்லாவற்றிற்கும் தடைவிதித்த போர்த்துகீசியர்களின் கொட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. மக்கள் சொல்லொணாத் துயர்களை அனுபவித்தார்கள். இவற்றையெல்லாம் நேரில் கண்ட ரானடே, இதுவே நாம் களத்தில் இறங்குவதற்கான சரியான நேரம் என்று முடிவெடுத்தார்.
அதுவரை காந்தியடிகளுடன் சேர்ந்து சத்தியாகிரகத்தில் ஈடுபட்து அமைதியாகப் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த கோவா மக்கள், நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டிருக்கும் போர்துகீசியர்களின் அடக்குமுறையிலிருந்து விடுதலை பெற ஆயுதப் போருக்குத் தயாராகும் நிலைக்கு வந்துவிட்டார்கள்.
இந்த நேரத்தில் மேலெழுந்தவர் தான் ரானடே.
முதன்முதலில் 1954, டிசம்பர் மாதத்தில் ஓர் நாள், ரானடேவும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து போர்த்துகீசியர்கள் கோட்டையாகவே இருந்த பனஸ்தா என்ற இடத்தில் நுழைந்து வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு 'ஜெய் ஹிந்த்' என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சிதான் கோவா விடுதலைக்கு வித்திட்ட ஒரு முக்கிய நிகழ்ச்சியாக மாறியது. அதாவது, இந்த நிகழ்ச்சி முலமாக கோவா மக்கள் இரண்டு விஷயங்களை உணர்ந்தார்கள்.
ஒன்று, போர்துகீசியர்களை வெல்லமுடியும் என்ற நம்பிக்கை.
இரண்டாவது, போராளிகள் எல்லோருக்கும் ஆயுதப் பயிற்சி வழங்க வேண்டும் என்பது. காரணம் பெரும்பான்மையான போராளிகள் விவசாயிகளாகவும் தாழ்த்தப்பட்ட மக்களுமாகவே இருந்தனர்.
இப்படி ஆயுதப் போராட்டத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தாலும் இந்திய அரசிடமிருந்து போதுமான ஒத்துழைப்போ ஊக்கமோ கிடைக்கவில்லை. மாறாக கைது செய்வதும் ஆயுதங்களை பறிமுதல் செய்வதுமாகவே இந்திய அரசும் செயல்பட்டது.
1954 ல் ஒரு முறை ரானடே துப்பாக்கி வைத்துக்கொண்டு கோவா மகாராஷ்டிரா பார்டரில் இருந்தபோது எதோ சலசலப்பு கேட்க, போர்த்துகீசிய ராணுவம் தான் என நினைத்து துப்பாக்கியைக் காட்டியபடி யாரது என்று கேட்டிருக்கிறார். ஆனால் அங்கு நின்றிருந்தது போர்துகீசிய இராணுவத்தினர் இல்லை. இந்திய ராணுவத்தினர்.
அதனால் துப்பாக்கியை கீழிறக்கிவிட்டார் ரானடே. இந்திய இராணுவத்தினரும் ரானடேவுடன் தந்திரமாகப்பேசி மகாராஷ்ரா எல்லைக்குள் அழைத்துச் சென்று விட்டனர். பின் திடீரென அவரைக் கைது செய்து அவரிடமிருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்துவிட்டு அனுப்பி இருக்கிறார்கள். இப்படி தொடர்ந்து இந்திய ராணும்வம் கோவா விடுதலைப் போராளிகளிடமிருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்து வந்திருக்கிறது.
ஒரு போராளிக்குத் தேவையானது ஆயுதங்கள் தான் அதை நம் அரசே பறிமுதல் செய்ததையும் காங்கிரஸ் அரசு செய்த துரோகமாகவே ரானடே பதிவு செய்கிறார்.
இப்படி ஒருபுறம் போர்த்துகீசியர்கள், ஒரு புறம் காங்கிரஸ் அரசு என்று இவர்களின் போராட்டத்திற்குத் தடை இருக்க, அதையும் மீறி பிரபாகர், சவாரி என்ற இருவர் தலைமையில் ரானடேவும் மற்ற போராளிகளும் சேர்ந்து ஸ்ரீ காவோ என்ற சுரங்கத்தில் நுழைந்து அங்கிருந்த வெடிபொருட்களை கையகப்படுத்தி இருக்கிறார்கள்.
ஸ்ரீ காவோ சுரங்கம் போர்த்துகீசிய அரசின் மிக மிகக் கடுங்காவல் உடைய சுரங்கம். அந்தப் பூட்டை உடைப்பதற்கே அரை மணி நேரம் ஆனதாம். அப்படிப்பட்ட காவலை மீறி பெற்ற வெடிபொருட்களில் 80 சதவீதத்துக்கும்மேல் மகாராஷ்டிர எல்லையில் மறைத்து வைத்துவிட்டார்கள் ரானடேவும் நண்பர்களும் .
சுரங்கத்தில்
இருந்து ஜெலட்டின் எடுத்துவிட்டு, பாதி மகாராஷ்டிராவில் ஒளித்து
வைத்துவிட்டார்கள். காரணம் இரண்டு நாடுகளாக இருந்ததால் போலீசாரால்
மகாராஷ்ட்ரா எல்லைக்குள் வர முடியாது.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தான் போர்த்துகீசிய அரசால் தேடப்பட்ட முக்கியமான போராளியாக ரானடே மாறினார் .
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தான் போர்த்துகீசிய அரசால் தேடப்பட்ட முக்கியமான போராளியாக ரானடே மாறினார் .
இருந்தாலும்
பயப்படாமல் ரானடேவும் அவர் நண்பர்களும் 'பெட்டியம்' காவல்நிலையத்தை
முற்றுகை செய்து அங்கிருந்த துப்பாக்கிகளை சூறையாடவேண்டும் என்று
முடிவெடுத்தனர். அங்கு சென்று துப்பாக்கிகளை எடுத்து வரும்போது ஒரு காவலரால்
ரானடே சுடப்பட்டார். வயிற்றில் குண்டு துளைக்க கீழே விழுந்த ரானடேவைக்
காப்பாற்ற வந்த நண்பர்களை அனுப்பிவிடுகிறார் ரானடே... ஆயுதங்களை கொண்டு
செல்லுங்கள் என்னைப் பற்றி கவலை வேண்டாம் என்று அவர்களை அனுப்பி விட்டு
மயங்கியவர் மீண்டும் கண்விழித்த போது ஒரு மருத்துவ மனையில் கைகால்கள்
சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் இருக்கிறார்.
கண்விழித்த அவர் தாகம் என்று சொல்ல ஓர் பெண் அவருக்கு தண்ணீர் கொடுத்தாராம். இந்தப் பெண்ணின் முகம் பார்த்தமாதிரி இருக்கிறதே என்று நினைத்திருக்கிறார். ஆனால் மீண்டும் மயக்க நிலைக்குச் சென்றுவிட்டார்
சுயநினைவுக்கு வந்தபின் அங்கிருந்த காவலரைக் கேட்டபோது, அது போர்த்துகீசிய இந்தியாவின் கவர்னர் ஜெனரல்லின் மனைவி என்று அறிந்திருக்கிறார்.
அடுத்த நாள்கவர்னர் நேரில் வந்து, வெடி மருந்துகளை எங்கு பதுக்கி வைத்திருக்கிறீர்கள் என்று விசாரணை செய்தும் வாய் திறக்காத மௌனியாகவே இருந்திருக்கிறார் ரானடே. அதனால், அடுத்த கட்ட விசாரணைக்காக பனாஜி சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டார் ரானடே.
1955 இல் முதன்முதலில் பனாஜி சிறையில் அடைக்கப்பட்த ரானடே ஐந்து வருடம் பனாஜி சிறையிலே தண்டனை அனுபவித்தார். அந்த ஐந்து வருடங்களும் மிகக் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தப்பட்டார். ஒரு மனிதனை நிலைகுலையச் செய்ய இந்த ஐந்து வருட தண்டனையே போதுமானது. ஆனாலும் மிக உறுதியாக நின்று இந்த ஐந்து வருடங்களையும் எதிர்கொண்டார் ரானடே.
பனாஜி சிறையில் ஐந்து வருடங்கள் கழிந்த நிலையில் 1960 ஆம் ஆண்டு ரானடேவிற்கு 26 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு போர்ச்சுகல் நாட்டிற்குக் கப்பல் மூலம் நாடுகடத்தப்பட்டார். அங்கு போர்ச்சுகீசிய ரகசிய போலீசின் PIDE (International Police for the Defence of the State) காக்சியஸ் சிறையில் அடைக்கப்பட்டு பல்வேறு கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டார்.
PIDE ஜெயிலில் போர்துகீசிசிய போலீசுக்கு ஆதரவாக ஆகும்படி பலவாறு மூளைச்சலவை செய்ய முயன்றிருக்கிறார்கள். அனால் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை ராணடே. எனவே, இரண்டு மாதம் தனிமைச்சிறையில் அடைத்துக் கொடுமை செய்தனர்.
யாருமற்ற அந்தத் தனி அறையில் 5 அடிகளுக்கு மேல் நடக்க இயலாத நிலையில் இருந்ததாகவும், உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் இருந்ததையம் தன்னுடைய புத்தகத்தில் (Struggle Unfinished) குறிப்பிடுகிறார் .
("I could walk only five steps in my cell. There was nobody to talk to. I would walk until I collapsed on the floor. There were no clothes on my body," )
அந்த இரண்டு மாதங்களும் வெறும் போர்த்துகீசிய நாளிதழ்கள் மட்டும் அவருக்கு வழங்கப்பட்டது.
ஒரு புரட்சியாளனை மூளைச் சலவை செய்து தங்கள் பக்கம் இழுத்து விடுவது அவ்வளவு எளிதல்ல.அப்படி ஒரு போராளி மாறிவிட்டால் அது பெரிய வெற்றி. ஆனால் ரானடே விஷயத்தில் அது முடியாமல் போனது.
அதன்பின் 18,ஏப்ரல்1961 இல் தனிமைச் சிறையிலிருந்து பொதுச்சிறைக்கு மாற்றப்பட்டார்.
19, டிசம்பர் 1961 ஆம் தேதி போர்துகீசியர்களிடமிருந்து கோவா விடுதலை பெற்றது. கோவா விடுதலைக்குப் பின் பல கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனாலும் போர்துகீசியச் சிறையில் இருந்த ரானடே விற்கு விடுதலை வழங்கப்படடவில்லை.
ரானடேவை சந்திக்க அவரின் பெற்றோரும் சகோதரர்களும் எவ்வளவோ முயன்றும் அவர்களுக்கு விசா மறுக்கப்பட்டிருக்கிறது.
ரானடே, தன்னுடைய விடுதலைக்கு ஆவண செய்யுமாறு தன்கைப்பட இந்திய அரசுக்குப் பல கடிதங்கள் எழுதினார். அதே நேரம் கோவா வில் "மோகன் ரானடே விடுதலைக் குழு "என்று ஒரு குழுவை உண்டாக்கி எல்லா இந்தியத் தூதர்களிடமும் ரானடேவின் விடுதலைக்கு உதவுமாறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அனைத்தும் பயனற்ற முயற்சியாகிப் போனது.
இந்தநிலையில் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பேரறிஞர் அண்ணா அமேரிக்க நாட்டின் யேல் பல்கலைக்கழகத்திற்குச் செல்லவேண்டியிருந்தது .அப்போது தன்னுடைய பயணத்தின் ஒரு பகுதியாக வாடிகன் சென்று போப் பால் VI அவர்களை சந்தித்து உரையாடியவர், கோவா விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டு போர்த்துகீசிய சிறையில் இருக்கும் ரானடேவை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார். காரணம் அன்றைய கால கட்டத்தில்(இன்றும்) வாடிகன் போப் அரசியல் சக்தியை விட மிகப்பெரிய சக்தியாக விளங்குபவர்கள்.
இந்த நிகழ்ச்சியால் அண்ணாவின் அறிவுக்கூர்மையும் மனித நேயமும், எடுத்த காரியத்தில் வெற்றி பெறவேண்டும் என்ற உண்மையான நோக்கம் கொண்டவர் என்பதும் புலனாகிறது. அதனால் தான் அரசியல் ரீதியாக அணுகாமல் எங்கு சென்று அழுத்தம் கொடுக்க வேண்டுமோ அங்கு சென்று அற்புதமாகச் செயல்படுத்தினார்.
இந்நிகழ்ச்சி அண்ணாவின் மனித நேயத்திற்கான மிகப்பெரிய சான்று.
காரணம் ரானடே தமிழனல்ல அதுமட்டுமல்ல... நாம் எதிர்க்கும் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்.... யோசித்துப் பாருங்கள், ஒரு நாத்திகன் ஒரு பிராமணனுக்காக ஒரு கிருஸ்துவப் பாதிரியாரிடம் சென்று அவர் விடுதலைக்கு கோரிக்கை வைக்கிறார் என்றால் அவருக்கு எவ்வளவு மனித நேயம் இருந்திருக்க வேண்டும்?
அண்ணாவின் கோரிக்கையை ஏற்ற போப், ரானடேவின் விடுதலைக்கான அனைத்துப் பணிகளையும் துரிதப்படுத்தினார். அதன் காரணமாக, 1969, ஜனவரி 29 ஆம் நாள் ரானடே விடுதலை பெற்று பிப்ரவரி 1 ஆம் தேதி இந்தியா வந்தடைந்தார்.
1981 வரை சிறைத்தண்டனை பெற்ற ரானடே அண்ணாவின் முயற்சியால் 12 வருடங்கள் முன்னதாக விடுதலைக்கு காற்றைச் சுவாசித்தார். தன்னுடைய நன்றியுணர்ச்சியைத் தெரிவிக்கும் வகையில் அண்ணாவை நேரில் சந்தித்து நன்றிகூற வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அந்தோ! புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அண்ணா 1969 பிப்ரவரி 3 ஆம் தேதி மறைந்துவிட்டார்.
தான் விடுதலை பெற்று இந்திய மண்ணில் கால் வைத்த இரண்டாவது நாள் அண்ணாவின் மறைவுச் செய்தியைக் கேட்ட ரானடே கலங்கினார். தனக்கு விடுதலை பெற்றுக்கொடுத்த தமிழக முதலமைச்சர் அண்ணாவைச் சந்திக்க முடியாமல் போய்விட்டதே என்று இன்றும் வருத்தத்துடன் நினைவு கூறுகிறார்.
தற்போது புனேவில் வசித்துவரும் திரு. ரானடேவை, உலக தத்துவ ஞானி தந்தை பெரியார் நூலகம், குவைத் சார்பாக திரு. லியாகத் அலி, இரண்டு வருடங்களுக்கு முன்பு புனே சென்று சந்தித்தார். அவரிடம் சென்னைக்கு வந்து அண்ணாவின் சமாதிக்கு மலர் வளையம் வைக்க வேண்டும் என்று தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.
(தற்போது 87 வயதில் இருக்கும் ரானடே, முதுமை காரணமாக பயணம் செய்ய முடியாத நிலையில் தன்னால் சென்னைக்கு நேரடியாக வரமுடியாது என்பதைத் தெரிவித்து அவர் சார்பாக அண்ணாவின் சமாதிக்கு மலர் வளையம் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்திருக்கிறார்)
குறிப்பு: மோகன் ரானடேவிற்கு 2001 ஆம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருது வழங்கி இந்திய அரசு பெருமை படுத்தியிருக்கிறது).
- லதாராணி பூங்காவனம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக