என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

புதன், 12 செப்டம்பர், 2018

பிள்ளையார் சுழியான சோதனை எழுத்தும் மஹா பெரியவாளின் கற்பனை விருந்தும்

பண்டைய காலத்தில் இலக்கியங்கள் வாய்மொழியாகச் சொல்லப்பட்டிருந்தது. 
அதாவது ஓலைச்சுவடியில் எழுத ஆரம்பிக்கும் முன், 
ஆசிரியர்கள் வாய் மொழியாகத் தான் மாணவர்களுக்குப் பாடம் சொல்லுவார்.  அதைக் கேட்டு மனத்தில் நிறுத்தி மனப்பாடம் செய்து தேர்ச்சி பெற்றவர்கள், பின்னாளில் அடுத்த மாணவருக்குத் தான் கற்றதை வாய்மொழியாகவே கற்பிப்பார். இப்படித்தான் இலக்கியங்கள் வழி வழியாக வளர்க்கப்பட்டு வந்தது.  

“நக்கீரர்,  தன்னுடைய மகன்  கீரங்கொற்றனாருக்கு களவியல் உரையைத் வாய்மொழியாக உரைத்ததையும்,  கீரங்கொற்றனார் தேனூர் கிழாருக்கு உரைத்ததையும் நாம் படித்திருக்கிறோம்.

இப்படி, வாய்மொழி இலக்கியத்தின் அடுத்த கட்டமாக இலக்கியங்களை ஓலைச் சுவடிகளில் எழுதினார்கள். அதற்கு பெரும்பாலும்  பனையோலைகளே பயன்படுத்தப்பட்டன. 
இளம் இலையாகவும் இல்லாமல் முற்றிய இலையாகவும் இல்லாத பனை ஓலைகளைத் தேர்ந்தெடுத்து, அதைத் தனித்தனியாகப் பிரித்து, அதிலுள்ள நடு நரம்புகளை நீக்கி, தேவையான அளவில் கத்தரித்து உலர்த்தி, நன்றாகக் காய்ந்த பிறகு அவற்றை தண்ணீர் அல்லது பாலில் போட்டு  வேகவைப்பார்கள். இப்படி நீரில் கொதிக்க வைக்கப்படுவதால் ஏடுகளில் இளக்கம் ஏற்படும்
அப்படி துவண்ட நிலையில் இருக்கும் ஓலைகளை எடுத்து மீண்டும் காயவைத்து, காய்ந்தபின்  கனமான சங்கு  அல்லது மழுமழுப்பான கல்லினால்  அந்த ஓலைகளை நன்றாகத் தேய்த்து பளளப்பான தகடுகள் போல ஆக்குவார்கள். அப்போதுதான் ஏடுகளில் ஆணி கொண்டு எழுத முடியும். (ஆவியில் வேகவைத்தும், ஈரமணலில் புதைத்து வைத்தும் கூட ஓலைகள் பதப்படுத்தியிருக்கிறார்கள்)
பதப்படுத்திய சுவடிகளின் ஒரு ஓரத்தில் நூல் நுழையும் அளவிற்கு ஒன்றோ இரண்டோ துளைகளை இட்டு,  அவற்றை நூலின் மூலம் கட்டி வைப்பர். 
இப்படிப் பதப்படுத்தப்பட்ட ஓலைகளில் எழுத்தாணி கொண்டு எழுதும்போது, அந்த ஓலை எழுத்துவதற்குத் தகுதியானதுதானா என்று சோதனை செய்ய "உ" என்ற எழுத்தும் அதன் கீழ் ஒரு கோடும் போட்டு அதன் தரத்தை உறுதி செய்வார். 
காரணம், தமிழ் எழுத்துக்கள் சுழி, கோடு  ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. (விளக்கம் தேவையில்லை என நினைக்கிறன்)
அப்படி சோதிக்கும் போது சரியாகப் பதப்படாமல் இருக்கும் ஓலைகள் சுழிக்கும்போதோ கோடு கிழிக்கும்போதோ கிழிந்துவிடும் அல்லது துளை ஏற்பட்டு விடும். அப்படிக் கிழிந்தாலோ துளை பட்டாலோ  அந்த ஓலைச்சுவடியை எறிந்துவிட்டு எழுதத் தகுந்த பதத்தில் உள்ள ஓலைகளில் எழுதுவார். அதற்குத்தான் அந்த "உ" அதன் கீழ் ஒரு கோடு போட்டது. இது ஓலைச்சுவடியைச் சோதிக்க நம் முன்னோர்கள் கையாண்ட முறை. 
ஆனால் அந்த சுழிக்கு பிள்ளையார் சுழி என்று பெயர் வைக்க எவ்வளவு பாடு பட்டிருக்கிறார்கள் பார்ப்பனர்கள் என்பதை நினைத்தால் பாவமாகதான் இருக்கிறது. 
தெய்வத்தின் குரலில் மஹா பெரியவா பிள்ளையார் சுழிக்கு சொல்லும் காரணம் படிக்கும்போது தலை சுற்றுகிறது.
அவர் சொல்வது இதுதான்: - 
சுழி என்பது வளைசல்; ‘வக்ரம்’ என்பார்கள். பிள்ளையாரின் தும்பிக்கை நுனி வளைந்து சுருட்டிக் கொண்டிருக்கிறது. அதனால் ‘வக்ரதுண்டர்’ என்றே அவருக்கு ஒரு பேர். பிள்ளையார் சுழி போடுவதில் பாதியாக இருக்கிற வளைசல் பூர்ணமாகிவிட்டால் முழு வட்டம். பூலோகமும், பல லோகங்களும், நக்ஷத்ர மண்டலங்கள் அடங்கியுள்ள பிரம்மாண்டமும் எல்லாமே வட்டமானவைதான். ‘அண்டம்’ என்றாலே முட்டை என்றுதான் அர்த்தம். முட்டை வட்ட வடிவந்தானே?(அப்படியா சாமீ….?) 
வளைசலான கொம்போடு ஆரம்பிக்கிற பிள்ளையார் சுழி, கொஞ்சம்கூட வளையாத நேர்கோட்டோடு முடிகிறது. பிள்ளையார் பூர்ணம், சூன்யம் இரண்டுமாக ஆனாற்போலவே வக்ரமானதும் அவர்தான், ஆர்ஜவமானதும் [நேரானதும்] அவர்தான் என்பது தாத்பரியம். வக்ர குணத்துக்கு நேரெதிரானதை ஆர்ஜவம் என்பார்கள். தமிழில் இதைத்தான் நேர்மை என்பது.
‘உ’ என்பது ப்ரணவத்தின் இரண்டாவதான நடு அக்ஷரம். அ-உ-ம என்ற மூன்றும் சேர்ந்தே ‘ஓம்’காரமான ப்ரணவம். விஷயம் தெரிந்தவர்கள் இதை இங்கிலீஷில் Om என்று எழுதாமல் Aum என்றே எழுதுவார்கள். ‘அ’ என்பது ஸ்ருஷ்டி; பிரம்மா. ‘உ’ என்பது பரிபாலனம்; விஷ்ணு. ‘ம’ ஸம்ஹாரம்; ஈச்வரன். த்ரிமூர்த்திகளும் தோன்றியது ஏக பராசக்தியால்தான். அதனால் அவள் ப்ரணவ ஸ்வரூபிணி. ஆனாலும் ஓம் ஐ தேவீ ப்ரணவம் என்று சொல்வதில்லை. ‘உமா’ என்பதே தேவீ ப்ரணவம் என்பார்கள். அ-உ-ம என்ற சப்தங்களே மாறி ‘உமா’ வில் உ-ம-அ என்ற இருக்கின்றன அல்லவா?
அ-உ-மவில் ஹ்ருதயம் மாதிரி நடுவேயிருப்பது ‘உ’. அதுவே கருணாமயமாகக் காப்பாற்றுகிற தேவீ ப்ரணவத்தில் ப்ரதம ஸ்தானத்திலிருக்கிறது. ப்ரணவ ஸ்வரூபப் பிள்ளையார் ‘அ’வும் ‘ம’வும் சேராமல் இந்த ‘உ’காரமாக மட்டுமே பிள்ளையார் சுழியில் இருப்பதைப் பார்க்கும்போது ஒன்று தோன்றுகிறது. அதாவது அவர் ”தாயைப் போலப் பிள்ளை” மட்டுமில்லை; தாயாருக்கும் ஒரு படி மேலே என்று தோன்றுகிறது. எப்படி?அவளும் ரக்ஷிக்கிற ‘உ’வுக்குப் பின்னாடியாவது ஸம்ஹார ‘ம’ ஸ்ருஷ்டி ‘அ’ இவற்றையும் வைத்தக் கொண்டிருக்கிறாள். ஆனால் பிள்ளையோ எப்போது பார்த்தாலும் எல்லாரையும் ரக்ஷிப்பது தவிர வேறு ஜோலியே வைத்துக்கொள்ளாத பூர்ண கருணாமூர்த்தியாக இருந்துகொண்டு ‘உ’ ஒன்றோடேயே நின்றுவிடுகிறார்.
ப்ரணவத்தில் ‘உ’ விஷ்ணுவின் ரூபம். உமாவும் விஷ்ணு ரூபிணியாக, நாராயண ஸஹோதரியாக, ‘விஷ்ணு மாயா விலாஸினி’யாக, ‘நாராயணி’ என்றே பெயர் படைத்தவளாயிருக்கிறாள். பிள்ளையாரைப்பற்றி ஸகலரும், ஸகல கார்ய ஆரம்பத்திலும் சொல்லும் ஸ்லோகத்திலும் ”சுக்லாம்பரதரம் விஷ்ணும்” என்றே வருகிறது. (இங்கே விஷ்ணு என்றால் ஸர்வ வியாபகமானவர் என்று அர்த்தம்.) ‘உ’ என்பது சிவ-சக்தி புத்ரனை விஷ்ணுவோடும் ஸம்பந்தப்படுத்தி, சைவ வைஷ்ணவத்தை ஸமரஸம் பண்ணி விடுகிறது!
வளைசலும் நேர்கோடுமாக இருக்கிற பிள்ளையார் சுழியில் நிறையத் தத்வார்த்தம் இருக்கிறது.வட்டமாகச் சுற்றுகிற ஸகலப் பிரபஞ்சத்தையும் அதற்கு ஆதார சக்தியான கோட்டையும் சேர்த்துத்தான் பிள்ளையார் சுழியில் வட்டமாகவும் நேர்கோட்டு பாகமாகவும் போடுகிறோம்.
கொம்பு, கோடு என்று இரண்டு வார்த்தைகள் சொன்னேன். வேடிக்கையாக இரண்டுமே பிள்ளையாரின் தந்தத்துக்குப் பேராயிருக்கின்றன. ‘ஏக தந்தர்’ என்பதை ‘ஒற்றைக் கொம்பன் ‘என்பார்கள்.
அவ்வை சொன்ன ‘கொடுவினை’ என்பது  ஜன்மாந்தர பாபங்களான பிராரப்த கர்மா. அந்தக் கர்மா எப்படியெப்படி நம்மைப் பழிவாங்க வேண்டும் என்று பிரம்மா நம் தலையில் எழுதியிருக்கிறாரென்று, சொல்லி, இதை பிரம்மலிபி என்பார்கள். ‘தலைச்சுழி’ என்பதும் இதைத்தான். இந்த தலைச் சுழியையும் கழித்து விடுவது பிள்ளையார் சுழி. ”கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே!”
தலை சுற்றியதா?.... அப்பப்பா…. நல்லவேளை எல்லோரும் கணினியில் type பண்ண ஆரம்பிச்சுட்டோம். பிள்ளையார் சுழி வழக்கொழிந்தது. 
ஆனாலும் மஹா பெரியவாளோட கற்பனைக்கு நான் ரசிகையாகி விட்டேன். 
        
- லதாராணி பூங்காவனம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக