என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

செவ்வாய், 2 அக்டோபர், 2018

தமிழகத்தில் அகோரிகள்; வலுவிழந்துவிட்டதா திராவிடர் கழகம்?

தந்தை பெரியாரால் பாதுகாக்கப்பட்டுவந்த தமிழகத்தில் இன்று அகோரிகள் சிறப்புப் பூஜை செய்து பிணத்தைப் புதைக்கும் அளவிற்கு  வளர்த்திருக்கிறார்கள் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சிகரமானதாகவும் ஆபத்தானதாகவும் தோன்றுகிறது. 

சடங்கு சம்பிரதாயங்கள் என்ற போர்வையில் மூடநம்பிக்கைகளை விதைத்துக் கொண்டிருந்த வந்தேறிகளின் சூழ்ச்சியால் பல நூற்றாண்டுகளாக இருளில் மூழ்கிக்கிடந்த தமிழகத்தில், பெரியார் என்ற ஒரு மாமனிதனின் முயற்சியும், ஒத்த கருத்துள்ள பல லட்சக்கணக்கான தொண்டர்களின்  கடும் உழைப்பும், மக்களை மூடநம்பிக்கைகளிலிருந்து  மெல்ல விலக்கி சுயசிந்தனை உள்ளவர்களாகவும் சுயமரியாதை உள்ளவர்களாகவும் மாற்றி வந்திருக்கிறது. 

ஆனால், தந்தை பெரியாரின் மறைவுக்குப் பிறகு, குறிப்பாக கடந்த 30 ஆண்டுகளில்  பெரியாரியம் தமிழகத்தில் மட்டுப்பட்டுதான்  இருந்தது என்பதை சுட்டிக்காட்டியே தீரவேண்டும். 

திமுகவின் ஆதரவுக் கரங்களாக மட்டுமே செயல்பட்டுக் கொண்டு பெரியாரின் கருத்துக்களை, பெரியாரை, இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதில் பின்தங்கித்தான் இருந்தது தி. க. என்பது கசப்பான  உண்மை 

உலகளாவிய நிலையில் பெரியார் பரவுகிறார் என்பது உண்மையென்றாலும், தற்காலத்தில், அதன் முக்கியக் காரணமாக இருப்பது சமூக வலைத்தளங்கள் தான் . இந்த  இன்டர்நெட் காலத்தில் சமூக வலைத்தளங்கள் மூலமாக, தந்தை பெரியாரை மக்களிடத்தில் பரவலாகக் கொண்டு சேர்ப்பதில் அக்கறையுள்ள தொண்டர்களின் தொடர் பதிவுகளும், பதில்களும்தான் பெரியாரை பெருமளவில் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கிறது. மற்றபடி, விடுதலை நாளிதழ்களை படித்துவிட்டோ, அல்லது, கழகங்கள் தங்களுக்குள் நடத்திக்கொள்ளும் கூட்டங்களினால் மட்டுமே  அல்ல என்பதையும் நாம் உணரவேண்டும். 

உண்மைதான், கழகத் தோழர்களே பார்வையாளர்களாக, கழகத் தோழர்களே பேச்சாளர்களாக தங்களுக்குள்ளாகவே பேசிப் "பிரிந்த" கூட்டங்கள்தான் அநேகமாக நடந்துகொண்டிருக்கிறது.  அதனால்தான், 
கருத்து வேறுபாட்டினாலும் , செயல் வேறுபாட்டினாலும் திராவிட கழகம் பல கிளைகளாகப் பிரிந்து வலுவிழந்து விட்டதே என்று உண்மையான பெரியார் தொண்டர்கள் வேதனைப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். 

இன்னும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், திராவிடர் கழகம் ஒரு கார்ப்பரேட் கம்பெனி போல் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்றே பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. சில செயல்களைப் பார்க்கும்போதும், இக்கூற்று உண்மைதானோ, கொள்கையற்றோர் உலவிக்கொண்டிருக்கும் கூடாரமாக மாறி வருகிறதோ பெரியார் திடல் என்ற அச்சமும் ஏற்படுகிறது. 
 
இதுவரை பெரியார் சிலைகளை அவமானப்படுத்துவதும் பெரியாரை தரக்குறைவாகப் பேசுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தன  இந்துத்துவ அமைப்புக்கள். 

இப்போதோ , தமிழர்களைச் சுட்டுக் தின்பதற்கு அகோரிகள் தயாராகி வருகிறார்கள் என்பதற்கான முன்னோட்டமாகத்தான்  நேற்று, திருச்சியில் நடந்த சுடுகாட்டுச் சம்பவத்தைப் பார்க்க முடிகிறது. அதே நேரத்தில், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்குமெனில், தமிழகத்தின் அரணாக திராவிடர் கழகம் இருக்கிறது என்ற நம்பிக்கையை மக்கள் இழந்து விடுவார்களோ என்ற அச்சத்தையும்  ஏற்படுத்துகிறது.  

திருச்சியில், இந்த ஆண்டு ஜனவரி மாதம், கால பைரவர் சிலையை பிரதிஷ்டை செய்து சிறப்புப் பூஜை செய்ய  இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரண்டு வந்த அகோரிகளை கண்டும் காணாமல் விட்டதன் அகோர  வளர்ச்சியே நேற்று பிணத்தின்மேல் அமர்ந்து அகோரிகள் நடத்திய சடங்கு. 

உண்மையிலேயே, அந்தச் செய்தியைக் கேட்கும்போதும், காணொளியைப் பார்க்கும் போதும் தி க இதுபோன்ற செயல்களை எப்படித் தடுக்கப்போகிறது  என்ற கேள்வி எல்லோர் மனத்திலு
ம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை? 


- லதாராணி பூங்காவனம்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக