திரு. சுபவீர பாண்டியன் அவர்களுக்கு….
பாடகி சின்மயி, 2004 ஆம் ஆண்டு, கவிஞர் வைரமுத்து தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக Metoo பதிவு செய்தார். அந்தப் பதிவை ஏளனம் செய்யும் விதமாக ஒரு தரமற்ற பதிவை உங்கள் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறீர்கள்.
"இன்ஸ்பெக்டர், ஒரு பாலியல் புகார் குடுக்க வந்திருக்கேன்"
" தப்பு நடந்து 14 வருஷம் ஆயிடுச்சா #Metoo
இதுதான் உங்கள் பதிவு.
பாதிக்கப்பட்ட பெண் 14 வருடங்கள் அந்த வலியைச் சுமந்திருந்த
வேதனை உங்களைப் போன்றவர்களால் உணர்ந்துகொள்ள முடியாது என்பது உண்மையிலேயே வருத்தமாக இருக்கிறது.
கவிஞர் வைரமுத்து உங்களுக்கு அரசியல் ரீதியாக வேண்டப்பட்டவராக இருக்கலாம். பாடகி சின்மயி நீங்கள் சார்ந்திருக்கும் கட்சிக்கு எதிர்கட்சியினராக இருக்கலாம். அதற்காக ஒரு பெண்ணை இவ்வளவு அநாகரீகமாகவா பேசுவீர்கள்?
பெண்ணுக்கு சம உரிமை வேண்டும், பெண்கள் முன்னேற்றம் பெறவேண்டும், என்று மேடைக்கு மேடை பேசிக்கொண்டு, நான் ஒரு கருப்புச் சட்டைக்காரன், பெரியார் கொள்கையாளன் என்று பேசுவதெல்லாம் வெளிவேஷமா? அல்லது பணத்திற்காகவும் புகழுவுக்காகவும் பேசப்பட்ட வீர வசனங்களா?
ஒரு பெண்ணை பெண்ணாகக் கூடப் பார்க்க முடியாத நீங்கள் பெரியார் பற்றாளன் என்று சொல்வது அபத்தமாக இருக்கிறது. உண்மையிலேயே, பெண்களை அவமதிக்கும் இது போன்ற பதிவுகளைப் பதிவிட்டு பெரியாருக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்திவிட்டீர்கள்.
"தப்பு நடந்து 14 வருஷம் ஆயிடுச்சா? " என்ற இந்த இழிவினும் இழிவான சொற்களால் ஒட்டுமொத்தப் பெண்களின் மனத்தை ரணப்படுத்தி இருக்கிறீர்கள்.
சின்மயி சொன்ன செய்தி உண்மையோ பொய்யோ, வைரமுத்து அப்படி நடந்து கொண்டாரா இல்லையா என்பதையெல்லாம் தாண்டி, ஒரு பெண்ணை இழிவுபடுத்தி டிவிட்டர் பகுதியில் செய்தியைப் பகிர்ந்தது மாபெரும் குற்றமே.
இந்தத் தவறுக்கு, நீங்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் உங்களுக்கு எதிராக பெண்களின் குரல் ஒலிக்கும்.
https://twitter.com/Suba_Vee/status/1049998073743568896
#Metoo @
-கவிஞர்.லதாராணி பூங்காவனம். எம்.ஏ., எம்.காம்.,
//நான் ஒரு கருப்புச் சட்டைக்காரன், பெரியார் கொள்கையாளன் என்று பேசுவதெல்லாம் வெளிவேஷமா? அல்லது பணத்திற்காகவும் புகழுவுக்காகவும் பேசப்பட்ட வீர வசனங்களா?//
பதிலளிநீக்குடிவீட் பதிவில் உள்ள கருத்திற்காக ஒருவரை முழுமையாக கணக்கில் கொள்ளாமல் தனிப்பட்டு தாக்குதல் செய்திருப்பதாகவே என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
உங்கள் பார்வை பெண்ணிய கோணத்திலும், அவர் அரசியல் கோணத்திலும உள்ளது. இங்கு அவர் அரசியலாக பார்த்திருக்க கூடாதுதான்.