என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

திங்கள், 24 டிசம்பர், 2018

மனிதிகளும் சபரிமலைக் கலவரமும்


ஆணும் பெண்ணும் சமம் என்றும், பெரியார் வழிவந்தவர்கள் நாங்கள் என்றும் சொல்லி, சபரிமலையில் ஏறும் உரிமை எங்களுக்கும் உண்டு என்றும், புரட்சிசெய்கிறோம் என்றும் சொல்லிக்கொண்டு, சபரிமலை நோக்கிச்சென்ற மனிதி குழுவினரில் 11 பேர் பம்பை வரை சென்று கேரளாவில் மிகப்பெரிய கலவரத்தை உண்டாக்கியதோடல்லாமல், தமிழ்நாட்டிலும் பெண்ணியவாதிகளின் செயற்பாடுகளுக்கும் பெரியார் உணர்வாளர்களுக்கும் களங்கம் உண்டாக்கியிருக்கிறார்கள்.
கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் பெரியார் உணர்வாளர்கள் என்பது எவ்வளவு உண்மையோ, பக்தியினாலும் மூடப்பழக்கங்களினாலும் வரும் கேடுகளை எடுத்துச் சொல்வதில் பெரியார் பற்றாளர்கள் தயங்குவதே இல்லை என்பது எந்த அளவிற்கு உண்மையோ, அதே அளவிற்கு "பக்தர்கள்" கோவில்களுக்குச் செல்வதற்குத் தடைவிதித்தால் அவர்களுக்காகக் குரல் கொடுப்பதில் முதன்மையானவர்கள் பெரியார் தொண்டர்களே என்பதும் உண்மை.
இப்படியிருக்க, இது இரண்டாவது "வைக்கம் போராட்டம்" என்று சொல்வது மிகவும் நகைப்பிற்குரியதாகவும், வைக்கம் போராட்டத்தையே அவமதிப்பதாகவும் இருக்கிறது.
பம்பையில் நடந்த நேற்றைய சம்பவமும், இதற்குமுன் நடந்த சில சம்பவங்களையும் கவனித்ததில், ஒரு போராட்டத்தை எப்படி நடத்துவது என்ற பக்குவம் அற்றவர்களாக மனிதி அமைப்பினர் இருக்கிறார்களோ என்ற எண்ணத்தைத்தான் தோற்றுவிக்கிறது.
பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருக்கும் விதிகளை ஒரே நாளில் உடைத்தெறிய முடியும் என்று நம்பி, செயலில் இறங்குவது அறிவீனமேயன்றி புரட்சியல்ல.
பல நூற்றாண்டுகளாக உள்ள சம்பிரதாயங்களை மாற்றச் சில வருடங்களாவது திட்டமிட்டு, தக்க சமயத்தில் களமாடினால்தான் வெற்றியடைய முடியுமேயன்றி, பெருமளவில் மக்கள் பலமோ, பண பலமோ இல்லாமல் இப்டிப்பட்ட செயல்களில் இறங்குவது துயரத்தையே கொடுக்கும்.
அப்படித்தான் நடந்து முடிந்திருக்கிறது நேற்றைய நிகழ்ச்சி.
உண்மையிலேயே பக்தியுடன் செல்பவர்களாக இருந்தால் மலைக்குச்செல்லும், மற்ற பக்தர்களைப்போல்,
குருசாமிகளிடம் மாலைபோட்டு, விரதமிருந்து, தினமும் காலையும் மாலையும் கோவிலுக்குச் சென்று ஐயப்பப் பூஜையில் கலந்தும், ஐயப்னை வழிபட்டும் விரத முடிவில் இருமுடி கட்டியும், மாலைபோட்ட பக்தர்களெல்லாம் ஒன்று சேர்ந்து, குடும்பத்தாரும் மற்ற பக்தர்களும் வழியனுப்ப, சபரிமலைக்குச் செல்லும் உரிமையைப் பெறவேண்டும்.
அல்லது,
பெண்களுக்கு மட்டும் ஒருநாளை ஒதுக்கித்தாருங்கள், அன்றையதினம் நாங்கள் மலையேறுகிறோம் என்று அரசாங்கத்திடமோ கோவில் நிர்வாகத்திடமோ அனுமதி பெற்றிருக்க வேண்டுமே தவிர, சுற்றுலா செல்வதுபோல் நினைத்த வேகத்தில், அல்லது எங்களால் முடியும் என்ற ஆணவத்தோடு செல்வது எல்லா இடத்திலும் பயனளிக்காது. "நாங்க யார்னு காட்றோம்" என்று சவால் விட்டு தமிழ்நாட்டுப் போலீஸிடம் வீரம்காட்டி, அவர்களின் அமைதியைக் கண்டு வெற்றி பெற்றுவிட்டதாக எண்ணிக்கொண்டதன் விளைவுதான் இந்த விபரீதத்தின் வித்தாக அமைந்துவிட்டது.
ஆம், அவர்களின்(கோவில்) விதிப்படி ஐம்பது வயதுக்கு உட்பட்ட பெண்கள், விரதமில்லாமல், தினம் பூஜை செய்யாமல், இருமுடி கட்டாமல் வீம்புக்காகக் கோவிலில் நுழைவோம் என்று சொன்னால் உண்மையான பக்தர்கள் எதிர்க்கத்தான் செய்வார்கள்.
கல்லால் அடித்தும் தேங்காயால் அடித்து மண்டையை உடைப்போம் என்று சொல்லி விரட்டியதையும், இவர்களிடமிருந்து தப்பித்தால் போதும் என்று ஓடி வந்ததையும் திரும்பத்திரும்பத் தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பப்படுவதையும்,
இந்தப் பயணத்தில் சென்ற மனிதி குழுவிலுள்ள பெண்களை, பக்தர்களும் பகையுணர்ச்சி கொண்டோரும் இவர்கள் தீவிரவாதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும், நக்ஸல்கள் என்றும், பலவாறாகப் பேசுவதையும், இவர்கள் கேரளாவிலிருந்து திரும்பிவரும் இரயில் பெட்டிகளைக் கல்லால் அடித்தும், இரயில் கடந்தவுடன் தண்டவாளத்தில் சாணி கரைத்து ஊற்றி தீட்டுக் கழிப்பதையும் கேட்கவும் பார்க்கவும் வருத்தமாகத்தான் உள்ளது.
இனியாவது போராட்டங்களில் அனுபவமிக்கவர்களின்/ தோழமைக்கட்சிகளின் அறிவுரைகளைக் கேட்டு செயலில் இறங்குவதே நல்லது என்பதைப் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன்.
மனிதிகளுக்கு இன்னொரு முக்கியமான செய்தி, எந்த அமைப்பின் மூலமாகப் போகிறோமோ அந்த அமைப்பின் பெயரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதைவிடுத்து, நாங்கள் பெரியாரிஸ்டுகள், இது இன்னொரு வைக்கம் போராட்டம் என்று சொல்லி உண்மையான பெரியாரிஸ்டுகளை அவமானப்படுத்தாதீர்கள் அல்லது வெறுப்பேற்றாதீர்கள்.
ஏனென்றால், முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது, வைக்கம் போராட்டம் என்பது கோவில் நுழைவுப் போராட்டமல்ல. கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் தாழ்ந்த சாதியினர் நடக்கக்கூடாது என்றிருந்த கட்டுப்பாட்டை உடைத்தெறிந்து அந்தத் தெருக்களில் நடக்கும் உரிமையை எல்லோருக்கும் வாங்கிக்கொடுத்த போராட்டம் அது.
அதே போல, எந்த பெரியார் தொண்டரும் கோவிலுக்குச் சென்று "கடவுளை வழிபடுவதை" ஒரு சவாலாகச் செய்ய மாட்டான்.
கொண்ட கொள்கையை விட்டு இருமுடியை தலையில் சுமக்க மாட்டான்.
இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், பெரியாரின் படை ஒரு போராட்டத்திற்குத் தயாராகிறது என்றால் பத்துப் பதினைந்து பேரோடு களமிறங்க மாட்டார்கள், ஆயிரக்கணக்கில் ஒன்று சேர்ந்து வெற்றியடையும் வரை போராடுவார்கள். தப்பித்தால் போதுமென்று ஓடிவர மாட்டார்கள்.
எனவே, இனியாவது கவனமாகச் செயல்படுங்கள். அவசரம் ஆபத்தைத்தான் விளைவிக்கும்.
- லதாராணி பூங்காவனம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக