என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

புதன், 5 செப்டம்பர், 2018

ஓவியாவும் சோபியாவும்



தமிழிசை சவுந்தரராஜன் விமானத்தில் பயணித்தபோது சோபியா முழக்கமிட்ட  #பாசிச பாஜக ஒழிக என்ற கோஷம் குறித்த நியூஸ் 7 தொலைக்காட்சியில் நடந்த கருத்துக் களத்தில் பேசிய தோழர் ஓவியாவின் பேச்சு, பாஜக விற்கு எதிராக இருக்கும் திக, திமுக மற்றுமுள்ள பாஜக எதிர்ப்பாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கிறது. காரணம் எல்லோருமே உணர்ச்சி வசப்பட்ட நிலையில் தான் இருக்கிறார்கள். அதனால் தான் தோழர் ஓவியாவின் ஆழமான கருத்துக்களை உள்வாங்கத் தவறிவிட்டார்கள்.

முதலில், முற்றிலும் மாறுபட்டு தெளிவாகவும் அழுத்தமாகவும், தன்னுடைய கருத்துக்களைப் பதியவைத்த தோழர் ஓவியாவின் நேர்மையும் துணிச்சலும் பாராட்டுக்கு உரியது. 

தங்கள் கட்சித் தலைவருக்கு இப்படி நடந்தால், பிற கட்சிக் காரர்கள் என்ன செய்வார்கள் அல்லது செய்கிறார்கள்? என்ற ஓவியாவின்  கேள்விதான் எல்லோரையும் அச்சுறுத்தி இருக்கிறது. 

ஓவியாவின் இந்தக் கேள்விக்கான பதிலைச் சொன்னால் அவர்களின் நிலை என்னவாகும்  என்பதை அறிந்ததால் தான் இதுவரை எந்தக் கட்சியைச் சேர்ந்தவரும் அதற்கு பதில் அளிக்கவில்லை. ஒரு கேள்விக்கான பதிலைச் சொல்லவே உரிமை/தைரியம்  இல்லாத தொண்டர்கள்/ கட்சி விசுவாசிகள் தங்கள் தலைவரை எதிர்த்து யாரேனும் இதுபோன்ற கோஷமிட்டால், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மிகக் கொடூரமான முறையிலே தாக்கப்படுவார்கள் என்பதை நன்றாக அறிவார்கள். அது கொலை முதல் தற்கொலைவரை என்ன முடிவாகவேண்டுமானாலும் இருக்கும். 

அடுத்து, தோழர் ஓவியாவைப் பொறுத்தவரை, இது  இரண்டு பெண்களுக்கு இடையில் நடந்த பிரச்சனை.  ஒருவர் அவமானப் படுத்தியவர். இன்னொருவர் அவமானப்படுத்தப்பட்டவர். 

தமிழிசையை, பாஜகவின் மாநிலத் தலைவராகவோ, சக்திவாய்ந்த  அரசியல் பின்புலம் மிக்கவராகவோ பார்க்காமல், ஒரு பெண் என்ற ஒரே பார்வையோடு தோழர் ஓவியா தன் தரப்பு வாதத்தை முன்வைத்தார். 

இந்த ஆணாதிக்க சமூகத்தில் ஒரு பெண் பலவாறான அவமானங்களைத் தாண்டியே பொதுவெளிக்கு வரவேண்டிய நிலையில், சமூக அக்கறையோடு வெளிவர நினைக்கும் பெண்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்தி அவர்கள் குரல்களை பொதுவெளியில் ஒலிக்க விடாமல் செய்துவிடுவார்களோ என்ற ஆதங்கம்தான், "தனியாகப் பயணம் செய்யும் ஒரு பெண்மணியை ஏன் பதட்டப்பட வைக்கிறீர்கள் என்ற நியாயமான கேள்வியோடு தொடங்கி, எதிர்ப்பைக் காட்டவேண்டிய முறை இதுவல்ல என்றும், எதிர்ப்பைக் காட்டவேண்டிய களம் இதுவல்ல" என்றும் தெளிவாகக் குறிப்பிட்டார்.

ஆனால், பாஜக ஆட்சியின் மீது வெறுப்பிலுள்ள மற்ற கட்சியினர், தமிழிசை அவர்களை எதிர்கட்சித் தலைவராகப் பார்த்ததால்தான் இத்தனை பிரச்சினையும் பூதாகரமாக்கப்பட்டது. அதனால்தான் சோபியாவின் குரல்  பாஜவிற்கு எதிரான குரலாக மட்டுமே  பார்க்கப்பட்டது. 

அதிலும்,  திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் டிவிட்டர் பதிவு ஒட்டுமொத்த திமுக தொண்டர்களுக்கும் மயக்க மருந்து கொடுத்ததுபோல் ஆகிவிட்டது. யாரும் தெளியவே இல்லை. #பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று ஆஷ்டேக் போட்டு ட்ரெண்ட் ஆக்குவதையே தலையாய கடமையாக நினைத்துச் செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள். 

இந்தப் பிரச்சனையை வேறு கோணத்தில் சிந்திப்பது கூட தலைமைக்குச் செய்யும் துரோகமாக நினைத்துக்கொண்டு, சோபியாவை, வேலுநாச்சியாராகவும் குயிலியாகவும், வீரத்தமிழச்சியாகவும் வரிந்து கட்டி வாழ்த்துப்பா பாடி தங்களுடைய தலைவரின் பாதச் சுவடுகளை சமூக வலைத்தளங்கள் மூலமாகவே தொட்டு முத்தமிட்டு கண்களில் ஒற்றிக்கொண்டிருந்தார்கள். 

இதே, தமிழிசையின் இடத்தில் கனிமொழி இருந்திருந்து, கனிமொழிக்கு எதிராக ஒரு பெண்ணின் குரல் உயர்ந்திருக்குமென்றால் இன்று எவ்வளவு ஆதரவுக் குரல்களைக் கனிமொழி பெற்றிருப்பார்?  அப்படி ஒருவேளை நடந்திருப்பின், பெண்ணியம் பேசுகின்ற மனுஷ்யபுத்திரன் நேற்றைய விவாதத்தில் ஒரு கருத்து விவாத கதகளியே  ஆடி இருந்திருப்பார் அல்லவா?   

ஆனால், எந்தப் பெண்ணிற்கு அநீதி நடந்தாலும் அதற்கு எதிராக  எப்போதும் குரல் கொடுப்பது போல்தான், கொள்கை மாறுபாடு கொண்டிருந்தாலும், தமிழிசைக்கு எதிரான சம்பவத்திற்கும்  ஒலித்தது ஓவியாவின் குரல். அது  பெண்களுக்கு ஆதரவான குரலே அன்றி பாஜாவுக்கு ஆதரவான குரல் அல்ல என்பதைக் கூட புரிந்து கொள்ளாமலும் அல்லது புரிந்து கொண்டும் அதை ஏற்றுக்கொள்ள மனமில்லாதவர்களும்தான் சோபியாவின் கைது மற்றும் அவர்மீது பதியப்பட்ட வழக்குகளை ஓவியா கண்டித்துப் பேசியதையும்  கவனமாகத் தவிர்த்துவிட்டு. அவர் பாஜாகாவின் ஸ்லீப்பர் செல், பாஜகாவின் கூஜா, காசு வாங்கிவிட்டார், தமிழிசைக்கு ஆதரவு, என்று வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசிக்கொண்டு எதிர்ப்பை உமிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்னொன்றும் சொல்ல வேண்டும், தோழர் ஓவியா அவர்கள், சோபியா போன்ற பெண்கள் தைரியமாக வெளியில் வரவேண்டும் என்று விரும்புபவர். அதை புரிந்து கொள்ளவேண்டும். 

அதேநேரம்,  சோபியா என்ற பெண் அரசியல் தலைவரிடம் எதிர்ப்பைக் காட்டியிருக்கக் கூடாது என்று அவர் சொல்லவில்லை. எதிர்ப்பைக் காட்டிய முறை தவறு என்றே குறிப்பிட்டார். மேலும் இதுபோன்ற முறையற்ற எதிர்ப்புக்களையோ போராட்டங்களையோ யாரும் ஆதரிக்காதீர்கள் என்றே கூறினார், காரணம்,  இப்படிப்பட்ட முறையற்ற எதிர்ப்பைப் பாராட்டுவதினால்தான் , முக்கியமான/ தேவையான எதிர்ப்பைக் காட்டவேண்டிய உண்மையான  போராட்டங்கள்  பலவீனப்படுகிறது என்று குறிப்பிட்டார். அனால் அவர் கூறிய இந்தக் கருத்து யாருடைய காதிலும் விழாமல் போனது வேடிக்கை.


கடைசியாக,



ஜெயலலிதா, மம்தா, மாயாவதி போன்ற பெண் தலைவர்களெல்லாம் இல்லையா என்று மனுஷ்ய புத்திரன் போன்றே கேட்கும் அத்தனை பேருக்குமான  பதிலாக "பதவியில் இருக்கும் பெண்களின் கால்களில் விழுந்து வணங்கத் தயங்காதவர்களின் soft Target ஆக தமிழிசை இருந்திருக்கிறார்" என்று கண்டித்த தோழர் ஓவியாவின் வாதம் முற்றிலும் சரியானதே. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக